2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பலம் வாய்ந்த பவுலிங் யூனிட்டாக இருந்த மும்பை அணியிலிருந்து ஒவ்வொரு பவுலராக காயத்தால் வெளியேறி வருகின்றனர்.
2024 ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு பிறகு “ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஆகாஷ் மத்வால், தில்சன் மதுஷங்கா, நுவன் துஷாரா, ஜேசன் பெஹன்ட்ராஃப், ரொமாரியோ ஷெஃபர்ட், ஹர்திக் பாண்டியா, அர்ஜுன் டெண்டுல்கர்” என ஒரு வேகப்பந்துவீச்சு பட்டாளமே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்களால் ஜெரால்ட் கோட்ஸீ, தில்சன் மதுசங்கா, ஜேசன் பெஹன்ட்ராஃப் முதலிய வீரர்கள் போட்டிக்கு கிடைக்காத நிலைமைக்கு மும்பை அணி சென்றுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேசன் பெஹரன்டராஃப், காயம் காரணமாக விலகியுள்ளது மும்பைக்கு அவர்களின் வேகப்பந்து வீச்சுத் துறையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவரை தொடர்ந்து தில்ஷன் மதுசங்கா, வங்கதேசக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்தார். ஐபிஎல் 2024-ன் ஆரம்ப கட்டங்களில் அவரை கிடைக்கவிடாமல் செய்துள்ளது.
உடன் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து மீண்டு வருகிறார். அவரும் மும்பையின் முதல் சில போட்டிகளுக்கு கிடைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இப்படி மூன்று கிளாசிக் பவுலர்கள் விலகிய நிலையில், தற்போது மும்பை அணியில் மெயின் பவுலர்களாக ”ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால், நுவான் துஷாரா மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர்” மட்டுமே இருக்கின்றனர். அதே நேரத்தில் அவர்களின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியில் பந்து வீசத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உடன் ரொமாரியோ ஷெப்பர்ட்டும் ஒரு சீம்-பவுலிங் ஆல்ரவுண்டராக மும்பை அணிக்கு கூடுதல் பவுலராக உள்ளார். இந்த சூழலில் தான் ஜேசன் பெஹன்ட்ராஃபுக்கு மாற்று பவுலராக இங்கிலாந்தின் லுக் உட்டை இணைத்துள்ளது மும்பை அணி.
ஜேசன் பெஹன்ட்ராஃபுக்கு மாற்று பவுலராக இணைக்கப்பட்டுள்ள லுக் உட், இங்கிலாந்துக்காக ஐந்து டி20 போட்டிகள் உட்பட 140 டி20களில் விளையாடி 147 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இங்கிலாந்தின் தி ஹன்ட்ரட், பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போன்ற பல டி20 லீக்குகளில் விளையாடியிருக்கும் உட் தன்னுடைய திறமையை நீரூபித்துள்ளார். ஐபிஎல்லில் இதுவே அவருக்கு முதல் தொடராகும்.
SKY அப்டேட்டை பொறுத்தவரையில், இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைந்து வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மும்பையின் தொடக்க ஆட்டத்திலும் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. மும்பை அணிக்குள் ஏற்கனவே பலப்பிரச்னைகள் இருந்துவரும் நிலையில், வீரர்களின் காயம் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.