உலக அளவில் கால்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளுக்கு அடுத்து அதிகளவு ரசிகர்களைக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில், சுவாரஸ்யம் சேர்ப்பதே பேட்டர்கள் அடிக்கும் சிக்ஸர்கள்தான். ஒவ்வொரு பேட்டர் அடிக்கும் சிக்ஸருக்காக ரசிகர்கள் மைதானத்தில் குவிவது உண்டு. ஆனால், அப்படியான சிக்ஸர்களை பேட்டர்கள் அடிக்க கிரிக்கெட் கிளப் ஒன்று தடைவிதித்திருப்பதுதான் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விநோத சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறி உள்ளது.
கிரிக்கெட்டைக் கண்டுபிடித்ததாக அறியப்படும் இங்கிலாந்தில் மிகப் பழைமையான மேற்கு சசெக்ஸில் உள்ள 234 ஆண்டுகள் பழமையான சவுத்விக் அண்ட் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப், பேட்டர்கள் தங்கள் சொந்த மைதானமான தி கிரீனில் சிக்ஸர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி, சில ரசிகர்களுக்கு விநோதமாகத் தோன்றினாலும், இந்தியா முழுவதும் கல்லி கிரிக்கெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் விதியிலிருந்து இது மிகவும் வேறுபட்டதல்ல.
குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும்போது, சிக்ஸர் அடிப்பது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொந்தரவைத் தருகிறது. அதன்காரணமாகவே, சவுத்விக் அண்ட் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப்களிலும் சிக்ஸர் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேட்டர்கள் சிக்ஸர் அடிப்பதால், கிளப்புக்கு அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் கார்கள் பெரும்பாலும் சேதமடைவதாக அப்பகுதி மக்களால் புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்தே, இத்தகைய முடிவை கிளப் நிர்வாகம் எடுத்துள்ளது. மேலும், பேட்டர் ஒரு சிக்ஸர் அடித்தால் அதில் ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. தொடர்ந்து 2வது சிக்ஸர் அடித்தால் அந்த வீரருக்கு அவுட் வழங்கப்படும் எனவும் விதிகளில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.