நடப்பு ஐ.பி.எல் தொடரின் எட்டாவது போட்டியானது ராஜஸ்தானின் இரண்டாவது ஹோம் கிரவுண்டான அசாமில் உள்ள பர்ஸபரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றியை சுவைத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸும், பஞ்சாப் கிங்ஸும் இரண்டாவது வெற்றிக்காக வேட்டியை மடித்துக்கட்டி இறங்கினார்கள். டாஸ் வென்ற சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.
கடந்த போட்டியில் `ஆல்தோட்ட பூபதி' சிம்ரனை விட சிறப்பாக ஆடிய ப்ரப்சிம்ரனும், கேப்டன் தவானும் பஞ்சாப்பின் இன்னிங்ஸை ஓபன் செய்ய, போல்ட் பந்து வீச வந்தார். போல்ட்டை நாயகனாக வைத்து `முதல் ஓவரும் முரட்டு பவுலரும்' என படமே எடுக்கலாம். அந்தளவிற்கு, முதல் ஓவரிலேயே விக்கெட்களை அள்ளும் ஆட்டக்காரர் அவர். அவரது ஓவரின் 4வது பந்தை மிட் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ப்ரப்சிம்ரன். ஆமா, அவருக்கு பயமில்லை. அதுக்கு இதுதான் சாம்பிள்!
கே.எம்.ஆசிஃப் வீசிய 2வது ஓவரில் ஓங்கி ஒரு சிக்ஸரையும் அடித்தார் ப்ரப்சிம்ரன். முதல் ஓவரில் தவறவிட்டதை, இரண்டாவது ஓவரில் கவர்ந்துவிடலாம் என மீண்டும் பந்து வீசவந்தார் போல்ட். ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி, பேக்வார்டு பாயின்ட்டில் ஒரு பவுண்டரி. தடாரென அடித்தார் தவான். ஆசிஃப் வீசிய 4வது ஓவரில், முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார் ப்ரப் சிம்ரன். ஒரு மாதிரி டென்னிஸ் பேட் ஷாட்! மேலும், 3வது பந்தை இன்னொரு பவுண்டரிக்கும், 4வது பந்தை சிக்ஸருக்கும், கடைசிப் பந்தை மீண்டும் ஒரு பவுண்டரிக்கும் என பறக்கவிட்டார். `யாராவது அவரை கன்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்' என ராஜஸ்தான் ரசிகர்கள் அரண்டுபோனார்கள்.
சுழற்பந்தை இறக்கிப் பார்த்தார் சாம்சன். இறங்கவில்லை சிம்ரன். மிட் விக்கெட்டில் ஒரு பவுண்டரி, மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி என அஸ்வினை அடித்து துவம்சம் செய்தார். மீண்டும் ஆசிஃபை கொண்டுவந்தால், ப்ரப்சிம்ரனுக்கு முன்பாகவே ஆசிஃப் அரைசதம் அடித்துவிடுவார் என பயந்து, ஹோல்டரை கொண்டுவந்தார் சஞ்சு. ப்ரப்சிம்ரன் அவரையும் விட்டு வைக்கவில்லை. இரண்டாவது பந்து, கவர் திசையில் பவுண்டரிக்கு ஓடியது. பவர்ப்ளேயின் முடிவில் 63/0 என பந்தாவாக நின்றார்கள் பஞ்சாப் சகோதரர்கள்.
அஸ்வின் வீசிய 7வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிட்டியது. சாஹல் வீசிய 8வது ஓவரில், தவன் ஒரு பவுண்டரியை விளாசினார். மீண்டும் வந்தார் போல்ட். முதல் பந்தே, சிக்ஸருக்கு பறந்தது. இம்முறை பேஸ்பால் ஷாட்!
ஹோல்டர் வீசிய 10வது ஓவரில், ப்ரப்சிம்ரனின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சிம்ரனின் பேட்டிலிருந்து மிட் ஆஃபில் விழுந்த பந்தை, லாங் ஆஃபில் இருந்து ஓடிவந்து பாய்ந்து பிடித்தார். அஸ்வின் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை, நான்-ஸ்ட்ரைகர் முனையில் நின்றுகொண்டிருந்த பானுகாவை நோக்கி டமாரென அடித்தார் தவான். பந்தோ பானுகாவின் வலது கையில் பட, வலியில் துடித்துவிட்டார். மருத்துவர்கள் உடனே கிளம்பிவந்து, அவரை அழைத்துச்சென்றனர். ரிட்டையர்டு ஹர்ட்! அடுத்த ஆளாக, ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். ராஜஸ்தான் பவுலர்களை விட, தவானை நினைத்துத்தான் அவர் பயந்திருப்பார். நான்-ஸ்டிரைக்கர் முனையில் நிற்கிறோம். தவான் பேட்டிங், அஸ்வின் பவுலிங்! என்னதான் செய்வதென புரியாமல் பம்மியபடி நின்றார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆஷ்.
சாஹல் வீசிய 12வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை பளாரென அறைந்தார் ஜித்தேஷ். நங்கூர பேட்டிங் ஆடுகிறேன் என, சங்கூதுகிற பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த தவான், முழித்துக்கொண்டு கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். மீண்டும் வந்தார் கே.எம்.ஆசிஃப். குட் லென்த்தில் வந்த பந்தை லேசாக நகர்ந்து, ஃபைன் லெக் திசையில் ஸ்கூப் செய்தார். பந்து பவுண்டரியில் போய் விழுந்தது. சாஹல் வீசிய 14வது ஓவரில், டீப் பேக்வார்டு ஸ்கொயர், டீப் ஸ்கொயர் லெக், லாங் ஆஃப் என மூன்று திசைகளில் முன்று பவுண்டரிகளை முட்டிப்போட்டு சுழற்றினார். அந்த இரண்டாவது பவுண்டரியுடன், ஐ.பி.எல் தொடர்களில் தனது 50வது 50+ ஸ்கோரை கடந்தார் தவான். போல்ட் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஜித்தேஷ். சாஹல் வீசிய 16வது ஓவரில், ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஒரு பவுண்டரி அடித்தார் தவான். துருதிர்ஷ்டவசமாக, அந்த ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார் ஜித்தேஷ். 16வது ஓவர் முடிவில், 159/2 என பெட்டர் ஸ்கோர் அடித்து பட்டர் சிக்கனுடன் கொண்டாடியது பஞ்சாப்.
ரஸா வந்தார், அஸ்வினின் கேரம்பந்தில் பாக்கெட் ஆனார். ஹோல்டர் வீசிய 18வது ஓவரில், இன்னொரு சிக்ஸரை பறக்கவிட்டார் தவான். கடைசி இரண்டு ஒவர்களில், ஸ்கோர் எக்குதப்பாக எகிற வேண்டும். எங்கே நம்ம ஆட்டோக்கார தம்பியைக் காணோம் என பஞ்சாப் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, `தேல்பத்ரிசிங்' என ஆர்வமாய் பந்து வீச வந்தார் ஆசிஃப். 19வது ஓவரில் மட்டும் 16 ரன்கள். பாவத்த! கடைசி ஓவரை சிறப்பாக வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷாரூக்கானின் விக்கெட்டையும் கழட்டினார் ஹோல்டர். 20 ஓவர்கள் முடிவில் 197/4 என நல்ல ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்.
இந்த இரண்டு அணிகளும் கடந்து மூன்று சீசன்களாக மாறி மாறி மிகப்பெரிய ஸ்கோர்களை அடிப்பதும், பின் அதை சேஸ் செய்வதுமாக கொரளி வித்தை காட்டியிருப்பதால், இந்த மேட்ச்சிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை என பஞ்சாப், ராஜஸ்தான் ரசிகர்கள் குதூகலமானார்கள். சாம் கரண் முதல் ஓவரை வீசவந்தார். ஜெய்ஸ்வாலுடன் இன்னிங்ஸை ஓபன் செய்ய களமிறங்கினார் அஸ்வின். ராஜஸ்தான் ரசிகர்களே தலையை சொரிந்தார்கள். ரா.ரா நிர்வாகத்திலுள்ள ரா.பார்த்திபன் ரசிகர் யாரேனும் ஒருவரே இந்த யோசனையை வழங்கியிருக்க கூடும்.
சாம் வீசிய முதல் பந்தையே சம்பவம் செய்தார் ஜெய்ஸ்வால். ஸ்கொயர் லெக் திசையில் அநாயசமாக ஒரு சிக்ஸர். இருப்பினும், முதல் ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரை வீசவந்தார் சிறுவர் சிங் அர்ஷ்தீப். மீண்டும் முதல் பந்து, பவுண்டரிக்கு பறந்தது. 3வது பந்தை ஃபுல் லென்த் திசையில் வீச, இழுத்தடிக்க முயன்று ஷார்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெய்ஸ்வால். பானுகாவுக்கு பதில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கிய ஷார்ட் இந்த கேட்ச்சைப் பிடித்து பஞ்சாப் ரசிகர்கள் மனதில் இடத்தைப் பிடித்தார்.
சாம் கரண் வீசிய 3வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டினா பட்லர். `சிங்கம் களமிறங்கிடுச்சே' என ராஜஸ்தான் ரசிகர்கள் ஆரவாரமானர்கள். மூன்று பந்துகளை டின்னராக தின்றுமுடித்துவிட்டு, ஒரு ரன் கூட பில் கட்டாமல் களத்திலிருந்த அஸ்வின், அர்ஷ்தீப் ஓவரில் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் கிளம்பினார். பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே என ராஜஸ்தான் ரசிகர்கள் மீண்டும் தலையை சொரிந்தார்கள். கேப்டன் சாம்சன் உள்ளே வந்தார். பவுலரின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டார். பட்லரும் அவர் பங்குக்கு ஒரு சிக்ஸரை வெளுத்தார். அடுத்த ஓவரை வீசவந்தார் ப்ரார். 2,3வது பந்து சாம்சனின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு தெறித்தது. எல்லீஸ் வீசிய முதல் இரண்டு பந்துகளுக்கும் அதே கதிதான். ஆனால், எல்லீஸ் நகர் பக்கம் பலமாகவே காற்று வீசியது. பட்லர் அடித்ததில் இன்சைடு எட்ஜான பந்து, அவர் காலில் கட்டியிருக்கும் பேடில் பட்டு எகிறி, எல்லீஸின் கைகளுக்குள் தஞ்சமடைந்தது. வாழ்க்கை நாடகமா என அழுது தீர்த்தார்கள் ரசிகர்கள். ஆறு ஓவர் முடிவில் 57/3 என தத்தளித்தது ராயல்ஸ்.
ப்ரார் வீசிய 7வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. ராகுல் சாஹர் வீசிய 8வது ஒவரில், சாம்சன் அடித்த ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்கள். ரஸா வீசிய 9வது ஒவரில், ஒரு பந்து அகலபந்தாகி பவுண்டரிக்கு சென்றது உட்பட 11 ரன்கள் கிடைத்தது. பாம்பு சாஹர், பத்தாவது ஓவரில் படமெடுத்து ஆடி வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஒரு பக்கம் படிக்கல் உருட்டிய உருட்டில், தன் தலையில் பத்து கிலோ படிக்கல்லை ஏற்றி வைத்தது போல் அழுத்தமாக உணர்ந்த சாம்சன், எல்லீஸ் வீசிய 11வது ஓவரில், கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த கேட்சைப் பிடித்தது உங்கள் ஷார்ட்.
சஹார் வீசிய 12வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் பரக். ரஸா வீசிய 13வது ஓவரில் தனது முதல் பவுண்டரியைத் தட்டினார் படிக்கல். இன்னொரு பக்கம், கடைசிப்பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் பரக். அர்ஷ்தீப் வீசிய 14வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இன்னும் 36 பந்துகளில் 77 ரன்கள் தேவை எனும் நிலை. ஆட்டம் சூடு பிடித்தது!
15வது ஓவரின் முதல் பந்திலேயே பரக்கை அவுட் செய்தார் எல்லீஸ். பிறகு, கடைசிப்பந்தில் படிக்கல்லும் அவுட். படிக்கல் அவுட் ஆனதற்கு, ராஜஸ்தான் ரசிகர்களே ரஸகுலா ஊட்டி கொண்டாடினார்கள். 16வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் ராகுல் சஹார். ப்ரப்சிம்ரனுக்கு பதில் இம்பாக்ட் வீரராக ரிஷி தவானை இறக்கினார் ஷிகர் தவான். எல்லீஸ் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை அசராமல் சிக்ஸருக்கு அடித்தார் ஹெட்மெயர். அதே ஓவரின் கடைசிப்பந்தில் ஜூரெல் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர்.
சாம் கரண் வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என பஞ்சாப் ரசிகர்களைப் பயமுறுத்தினார் ஹெட்மயர். இன்னும் 12 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே தேவை. அர்ஷ்தீப் பந்து வீச வந்தார். மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி, இன் சைடு அவுட் ஷாட்டில் ஒரு பெரிய சிக்ஸர், மீண்டும் 4வது பந்தில் ஒரு பவுண்டரி என கலக்கினார் ஜுரெல். யார்க்கர் வீசுகிறேன் என ஏதேதோ செய்துகொண்டிருந்த அர்ஷ்தீப்பை வெச்சி செய்தார் ஜூரெல். 6 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை எனும் நிலை. ஜெயிக்க இரு அணிகளுக்குமே 50-50 வாய்ப்பு. கடைசி ஓவரை வீசவந்தார் சாம் கரண். கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி சென்றாலும், 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்று கொடுத்தார். ராஜஸ்தான் ரசிகர்கள் கரணைப் பார்த்து ஸ்ரூவ்வ்வ் என வெறியானார்கள். பஞ்சாப் அணி, தங்களது இரண்டாவது வெற்றியைப் பறித்து பஞ்சாகப் பறக்கவிட்டார்கள். 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை அள்ளி, ராயல்ஸின் டாப் ஆர்டரை காலி செய்த எல்லீஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. எல்லீஸ் நகர் பொதுமக்கள் பெருமிதமடைந்தார்கள்.