2024 ஐபிஎல் தொடரானது திடீரென அனுபவம் அதிகம் இல்லாத இளம் கேப்டன்களின் கீழ் விளையாடப்படவிருக்கிறது. ஆர்சிபி கேப்டன் ஃபேஃப் டூபிளெசிஸ் மூத்த வீரராக இருந்தாலும் ஒரு ஐபிஎல் சீசனில் மட்டுமே ஐபிஎல் கேப்டனாக விளையாடியுள்ளார். தற்போது இருக்கும் 10 கேப்டன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த ஐபிஎல் கேப்டனாக நீடிக்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனியும் கேப்டன்சி பொறுப்பை ஹர்திக் பாண்டியா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி என்ற மூன்று சாம்பியன் வீரர்களின் கேப்டன்சி பயணம் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு “புதிய ஐபிஎல் சீசனில், புதிய ரோலில் விளையாடவிருக்கிறேன்” என்று தோனி சமூகவலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். அதற்கேற்றார் போல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தோனி இந்த முடிவை கடந்தாண்டே எடுத்தது போல் முதலில் பேசப்பட்டாலும், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். கடந்தாண்டே தோனி கேப்டன்சி மாற்றம் குறித்து ஹிண்ட் கொடுத்தார் என்று தெரிவித்திருக்கும் ருதுராஜ், கேப்டனாக இருப்பதற்கு தகுதியான வீரர் என்று தோனி நம்பியதே தனக்கு பெரிய நம்பிக்கையை தருகிறது என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே போன்ற சாம்பியன் அணிக்கு கேப்டனாக இருப்பதும், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய தோனி போன்ற ஒரு வெற்றிகேப்டனுக்கு மாற்று கேப்டனாக இருப்பதும் சவால் நிறைந்தது என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும் களத்தில் முதுகெலும்பாக தோனியே இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் பேசுகையில், “கடந்தாண்டே மஹி பாய் என்னிடம் கேப்டன்சி மாற்றம் குறித்து சூசகமாக தெரிவித்தார். தயாராக இருங்கள், அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு பிறகு நாங்கள் முகாமிற்கு வந்ததும், அவர் என்னை சில பயிற்சி போட்டி உருவகப்படுத்துதல்களில் ஈடுபடுத்தினார். அதன்பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
தோனி பாய் “2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் விளையாட போகிறேன்” என்று அறிவித்ததும், பலர் என்னிடம் நீங்கள் தானே அடுத்த கேப்டன் என்று கேட்டார்கள். நான் அதை நம்பவில்லை, சோஷியல் மீடியாவிற்காக வேறு ஏதாவது காரணத்திற்காக பதிவிட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் முகாமிற்கு வந்த பிறகு ஒரு வாரத்திற்கு முன்பே ’இதுதான் முடிவு’ என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது” என்று ருதுராஜ் ஐபிஎல் வெப்சைட்டில் பேசியுள்ளார்.
தன்னுடைய கேப்டன்சி மாற்றத்திற்கு காரணம் இதுதான் என்று பேசியிருக்கும் அவர், “கேப்டன் பொறுப்பு கிடைத்ததை பெரியதாக உணர்கிறேன், இது நடந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து நான் ஒரு அங்கமாக இருப்பது, மற்றொன்று தோனி என்னை கேப்டன்சி மெட்டீரியலாக பார்த்தது. அவர் என்னை கேப்டனாக பார்ப்பதே எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. களத்தில் தோனி முதுகெலும்பாக இருக்கப்போகிறார், உடன் அஜ்ஜு பாய் மற்றும் ஜட்டு பாய் இருவரும் இருக்கின்றனர். நான் தோனி செய்ததை அப்படியே பின்தொடர நினைக்கிறேன், வேறு எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை" என்று ருதுராஜ் கூறியுள்ளார்.
27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் முதலில் 2019ம் ஆண்டு CSK உடன் இணைந்தார். ஆனால் அவர் வாய்ப்புக்காக 2020 சீசன் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பெஞ்சிலேயே பெரும்பாலும் அமர்ந்த ருதுராஜ், ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் முத்திரை பதிக்க போராடி தனது இடத்தை இழந்தார். கேப்டன் எம்எஸ் தோனியால் பெஞ்சில் இருக்கும் இளம்வீரர்களிடம் “ஸ்பார்க் இல்லை” என்ற விமர்சனத்தை எதிர்கொண்டார். பின்னர் சீசனின் கடைசி பாதியில் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டு, தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ், இன்னிங்ஸைத் திறந்து மூன்று அரைசதங்களை அடித்து “இந்த ஸ்பார்க் போதுமா” எனுமளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போதிருந்து, அவர் சிஎஸ்கே XI-ன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார், இரண்டு முறை தனியாளாக சிஎஸ்கேவிற்கு போட்டியை வென்றுகொடுத்த அவர், 2021-ல் ஆரஞ்சு கேப் வெற்றியாளராகவும் மாறி அசத்தினார். பேட்ஸ்மேனாக தனிமுத்திரை பதித்த ருதுராஜ், கேப்டனாகவும் முத்திரை பதிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்துள்ளது.