சிஎஸ்கே இளம் பவுலர் பதிரனாவுக்காக நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து நேரத்தை கடத்திய தோனியின் செயலுக்கு இணையத்தில் பாராட்டும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் வெற்றிப்பெற்று சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்பு களமிறங்கிய குஜராத் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றையப் போட்டியில் தோனியின் ஃபீல்டிங் வியூகங்கள் அபாரமாக இருந்தது. குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பீல்டிங்கை அமைத்து விக்கெட்டுகளை அள்ளினார் தோனி.
மேலும் நேற்றையப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களான தீக்ஷனா மற்றும் ஜடேஜாவின் பவுலிங் அருமையாக அமைந்து வெற்றிக்கு வித்திட்டது. இளம் பந்துவீச்சாளரான பதிரனாவை சிறப்பாக கையாண்டார் தோனி.
குஜராத் பேட்டிங்கின்போது 16வது ஓவரை வீச பதிரானாவை அழைத்தார் தோனி. அப்போது, அவரை கள நிடுவர்கள் திடீரென்று தடுத்தனர். இதனால் சற்றே கடுப்பான தோனி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிரானா களத்தில் 8 நிமிடத்திற்கு மேலாக காணவில்லை என்றும், இதனால் பதிரானா எவ்வளவு நேரம் சென்றாரோ, அவ்வளவு நேரம் களத்தில் ஃபீல்டிங்கில் நின்றால் தான் பந்துவீச முடியும் என்றும் நடுவர்கள் கூறினர்.
கிரிக்கெட்டின் விதிப்படி 8 நிமிடங்களுக்கு மட்டும் தான் களத்திற்கு வெளியே செல்லலாம். ஆனால் பதிரனா ஒரு நிமிடம் தாமதமாக 9 நிமிடம் எடுத்துக்கொண்டு களத்திற்கு வந்தார். அதனால் பதிரனா 5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என நடுவர்கள் கூறினர். ஆனால் இதனை மறுத்த தோனி நடுவர்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே நேரத்தை கடத்தினார்.
அதற்குள் 5 நிமிடங்கள் கடந்ததால், பதிரனாவை மீண்டும் பந்து வீச அழைத்தார் தோனி. ‘தோனி இதுபோன்று செய்தது தவறு, அவ்வாறு அவர் நேரத்தை கடத்தியிருக்க கூடாது’ என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தோனியின் ராஜதந்திரம் என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.