கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2024 ஐபிஎல் தொடரானது மார்ச் 22ம் தேதி (நேற்று) கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், ஆர்சிபி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
தோனிக்கு மாற்று கேப்டனாக சிஎஸ்கே அணியை வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டியானது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சண்டிகரில் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவந்து கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது மட்டுமல்லாமல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பண்ட்டை கேப்டனாக நியமித்திருக்கும் டெல்லி நிர்வாகம் அவரை முழுவதுமாக பேக்கப் செய்துள்ளது.
விறுவிறுப்பான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். டாப் ஆர்டர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் மற்றும் சாய் ஹோப் 3 பேரும் இரண்டு இரண்டு சிக்சர்களாக பறக்கவிட்டு கெத்துகாட்ட 8 ஓவர்களில் 74 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
ஆனால் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி வீரர்கள், அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளினர். ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு வந்து இரண்டு பவுண்டரிகளை விரட்டினாலும் 18 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினர்.
எப்படியும் டெல்லி அணி 150 ரன்கள்தான் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சை எதிர்கொண்ட இளம் வீரர் அபிஷேக் போரல் ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு 25 ரன்கள் அடித்து கலக்கிப்போட்டார்.
அபிஷேக் போரலின் கடைசி நேர அதிரடியால் 174 ரன்களை எடுத்தது டெல்லி அணி.
கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக ஹர்சல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜா 37 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். தற்போது மீண்டும் அதேபோலான ஒரு கடைசி ஓவரில் இடது கை பேட்ஸ்மேனான 21 வயது அபிஷேக் போரல் 25 ரன்கள் அடித்து மிட்டியுள்ளார்.
கடந்த ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹர்சல் பட்டேலை, 2024 ஐபிஎல் தொடரில் அவ்வணி கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, 10 ஓவர்களுக்கு 87 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.