`நான் சும்மா போகமாட்டேன், கொளுத்திட்டு வந்து உங்களைத்தான் கட்டிபிடிப்பேன்' எனும் மோடில் ஆடிக்கொண்டிருக்கிறது டெல்லி. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என 90'களின் தெலுங்குபட வில்லன்களைப் போல் வெறி பிடித்து அலைகிறது. நேற்று அவர்களிடம் மாட்டிய அணி பஞ்சாப் கிங்ஸ். இந்த ஆட்டத்தில் ஒருவேளை டெல்லி அணி ஜெயித்தால், டெல்லிக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. தோற்றால், முதல் அணியாக ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறும்.
டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ப்ரம்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் கலீல் அகமது. முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. 2வது ஓவரை வீசவந்தார் இஷாந்த். முதல் பந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார் தவன். அடுத்த பந்து, டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டோனுக்கு எட்ஜில் ஒரு பவுண்டரி கிடைத்தது. கலீலின் 3வது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ப்ரப்சிம்ரன். 4வது ஓவரை வீசவந்தார் அக்ஸர். ப்ரப்சிம்ரனுக்கு மீண்டுமொரு பவுண்டரி. அதே ஓவரில், அகலப்பந்தில் ஒரு பவுண்டரியும் கிடைத்தது. 5வது ஓவரின் முதல் பந்து, லிவிங்ஸ்டோனின் விக்கெட்டைத் தூக்கினார் இஷாந்த். டெல்லி ரசிகர்கள் குதூகலமானார்கள். பஞ்சாப் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி அழுதார்கள். அடுத்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா, அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். அக்ஸரின் 6வது ஓவரை சிக்ஸருடன் ஆரம்பித்தார் ப்ரப்சிம்ரன். ஆனால், ஓவரின் 4வது பந்து, க்ளீன் போல்டானர் ஜித்தேஷ் சர்மா. பவர்ப்ளேயின் முடிவில் 46/3 என தத்தளித்தது பஞ்சாப் கிங்ஸ்.
ப்ரவீன் டூபேவின் 7வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. குல்தீப் யாதவின் 8வது ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே. டூபேவின் 9வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் சாம் கரண். அக்ஸரின் 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில் 66/3 என பிட்சில் படுத்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 11வது ஓவரை வீசவந்தார் மார்ஷ். ஒரு சிக்ஸர், இன்னொரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார் ப்ரப்சிமரன். ஒரே ஓவரில் 21 ரன்கள்! குல்தீப்பின் 12வது ஓவரில், மீண்டுமொரு பவுண்டரி ப்ரப்சிம்ரனுக்கு. அக்ஸர் வீசிய 13வது ஓவரில், 42 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் ப்ரப்சிமரன். குல்தீப்பின் 14வது ஓவரில், அவர் பேட்டிலிருந்து ஒரு சிக்ஸர் பறந்தது. டூபேவின் 15வது ஓவரின் 2வது பந்தில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ப்ரப்சிம்ரன். அடுத்த பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் ரைலி ரூஸோ! அதற்கடுத்த பந்து, சாம் கரண் காலி. 15 ஒவர் முடிவில் 117/4 என கொஞ்சம் மீண்டிருந்தது பஞ்சாப்.
16வது ஓவர் வீசவந்த இஷாந்தை பவுண்டரியுடன் வரவேற்று, பவுண்டரியுடன் வழியனுப்பினார் ப்ரப்சிம்ரன். குல்தீப்பின் 17வது ஓவரில், முதல் பந்திலேயே ப்ரார் அவுட். மறுபக்கத்தில் விக்கெட்கள் மளமளவென சரிந்தாலும், மலைபோல் திடமாக நின்றாடிய ப்ரப்சிம்ரன், அதே ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என நொறுக்கினார். கலீலின் 18வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்௶அரிகளை அடித்து தனது சதத்தையும் நிறைவு செய்தார். 153 எனும் அணியின் ஸ்கோரில் 102 ரன்களை அடித்த தனி ஒருவன்! முகேஷ் குமாரின் 19வது ஓவரில், தனது விக்கெட்டை இழந்தார் ப்ரப்சிம்ரன். 65 பந்துகளில் 103 ரன்கள் எனும் சிறப்பான ஆட்டம் முடிவுக்கு வந்தது. பஞ்சாப் ரசிகர்கள், ஆனந்த கண்ணீர் விட்டார்கள். கலீலின் கடைசி ஓவரில் ரஸா ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவர் முடிவில் 167/7 என இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப் கிங்ஸ்.
ப்ரப்சிம்ரனுக்கு பதில் நாதன் எல்லீஸை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் தவன். வார்னரும் சால்ட்டும் டெல்லியின் இன்னிங்ஸை ஓபன் செய்ய, முதல் ஓவரை வீசினார் ரிஷி தவன். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரிக்கு பறந்தன. சாம் கரணின் 2வது ஓவரில், வார்னர் இன்னொரு பவுண்டரி அடித்தார். 3வது ஓவர் வீசவந்தார் ப்ரார். வார்னர் ஒரு பவுண்டரி, சால்ட் இரண்டு பவுண்டரிகள் என படையல் வைத்தார்கள். சாம் கரணின் 4வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கி, பவுண்டரியுடன் முடித்தார் வார்னர். எல்லீஸின் 5வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் டேவிட் வார்னர். சிறுவர் சிங்கின் 6வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டார் கேப்டன் வார்னர். பவர்ப்ளேயின் முடிவில் 65/0 என பவர்ஃபுல்லாக இருந்தது டெல்லி. அடுத்தடுத்த ஓவர்களில் பவரை பிடுங்கினார்கள் பஞ்சாப் பவுலர்கள்.
ப்ராரின் 7வது ஓவரை பவுண்டரியுடன் ஆரம்பித்த சால்ட், அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டானார். 8வது ஓவரின் முதல் பந்து, ஐ.பி.எல்லில் தனது 60வது அரைசதத்தை நிறைவு செய்தார் வார்னர். அடுத்த பந்து, மார்ஷின் விக்கெட்டைத் தூக்கினார் பாம்பு சாஹர். எல்.பி.டபிள்யு முறையில் மார்ஷுடன் சேர்ந்து, ரிவ்யூவும் காலி. அந்த ஓவரில் ரூஸோ ஒரு பவுண்டரி தட்டினார். ப்ராரின் 9வது ஓவரில், ரூஸோவின் விக்கெட்டையும் தூக்கினர். டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் பிடித்தார் ரஸா. அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த வார்னரை, கடைசிப்பந்தில் அவுட்டாக்கினார் ப்ரார். மீண்டும் எல்.பி.டபிள்யு. ரிவ்யூவை சரியாக பயன்படுத்தி விக்கெட்டை வாங்கியது பஞ்சாப் கிங்ஸ். பாம்பு சாஹர் வீசிய 10வது ஓவரின் முதல் பந்து, அக்ஸர் படேல் அவுட். மீண்டும் எல்.பி.டபிள்யு! அக்ஸரும் காலி, டெல்லியிடம் மிச்சமிருந்த ரிவ்யூவும் காலி. பவர்ப்ளேயின் முடிவில் ஜான் ஏறியிருந்த டெல்லி, 10 ஓவர் முடிவில் 88/5 என முழமாக சறுக்கியிருந்தது.
11வது ஓவர். கலீல் அகமதுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கியிருந்த மனீஷ் பாண்டே, ரன்கள் ஏதும் எடுக்காமல் ப்ராரின் சுழலில் சிக்கினார். ராகுல் சாஹரின் 12வது ஓவரில் டூபே ஒரு பவுண்டரி அடித்தார். ரஸாவின் 13வது ஓவரில் 3 ரன்கள் கிடைத்தது. சாஹரின் 14வது ஓவரில், அமான் கான் ஒரு பவுண்டரி அடித்தார். அர்ஷ்தீப்பின் 15வது ஓவரில் டூபே ஒரு பவுண்டரியும், அமான் கான் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இன்னும் 30 பந்துகளில் 53 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்கள்.
16வது ஓவரை வீசிய எல்லீஸ், அமான் கானின் விக்கெட்டைத் தூக்கினார். அர்ஷ்தீப்பின் 18வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. எல்லீஸின் 18வது ஓவரில், டூபேவும் அவுட். க்ளீன் போல்டு! அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் 4 ரன்கள். எல்லீஸ் வீசிய கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள். 136/8 என சொதப்பலாக ஆடிமுடித்தது டெல்லி. 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்று, ப்ளே ஆஃப் ரேஸில் உயிர்ப்புடன் நிற்கிறது பஞ்சாப். தனி ஒருவனாக போராடி 103 ரன்கள் குவித்த, ப்ரப்சிம்ரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிய முதல் அணியாக டெல்லி கேபிடல்ஸ், இனி யார் யாருடைய சங்கை கடிக்கப்போகிறதோ?