டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி லீக் சுற்றை விட்டே வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி மீது பாகிஸ்தானிய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்குள்ளேயே 3 கோஷ்டிகள் இருப்பதாகவும் இதுவே தோல்விகள் தொடர காரணம் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேப்டன் பதவியை இழந்த விரக்தியில் ஷாகீன் அப்ரிதியும் அப்பதவி கிடைக்காத அதிருப்தியில் முகமது ரிஸ்வானும் உள்ள நிலையில் இவர்களுக்கு ஆதரவாக சில வீரர்கள் உள்ளதாகவும் கேப்டன் பாபர் ஆசம் தலைமையில் ஒரு கோஷ்டி செயல்படுவதாகவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில நேரங்களில் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத அளவுக்கு கோஷ்டி மோதல்கள் தீவிரமாக இருப்பதாகவும் கிரிக்கெட் அணியுடன் தொடர்பில் உள்ளவர்கள் தெரிவித்ததுள்ளனர். ஏற்கனவே 3 கோஷ்டிகள் உள்ள நிலையில் மூத்த வீரர்களான முகமது ஆமீர் மற்றும் இமாத் வாசிம் அணிக்கு திரும்பியதும் குழப்பங்கள் அதிகரிக்க காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் அதில் தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளன. இந்த மோதல்களை பார்த்த பாகிஸ்தான் வாரிய தலைவர் மோஷின் நக்வி, தங்கள் அணிக்குள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படுவதுடன் ஊதியக்குறைப்பும் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதே அந்நாட்டு அரசு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல ஊகங்கள் நிலவும் நிலையில் பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.