நடப்பு ஐ.பி.எல் தொடரின் 17வது போட்டியாக தலயின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சேட்டாவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சேப்பாக்கத்தில் மோதின. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது மேட்ச் என்பதால், `எங்க அண்ணனுக்கு நாங்கதான்டா செய்வோம்' என மூடில் இருந்தார்கள் சூப்பர் கிங்குகள். டாஸ் வென்ற தோனி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர், ராஜஸ்தான் இன்னிங்ஸை ஓபன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் அறிமுக வீரர் ஆகாஷ் சிங். ஓவரின் மூன்றாவது பந்தை, ஃபீல்டிங்கில் கோட்டை விட்டார் தீக்ஷானா. பந்து எல்லைக் கோட்டைத் தாண்டியது. அடுத்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு ஃப்ளிக் செய்தார். 2வது ஓவரை வீசவந்தார் தேஷ்பாண்டே. சென்னை ரசிகர்கள் மெல்ல நெஞ்சைப் பிடிக்க, `இம்பாக்ட் ப்ளேயர்னாதான் பிரச்னை. லெவன்ல ஆடினா வேற லெவல்ல ஆடுவேன்' என ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டைக் கழட்டினார் துஷார். உஷாராக வீசப்பட்ட அரைக்குழி பந்தை அடித்து, மிட் ஆஃபில் நின்றுகொண்டிருந்த தூபேவிடம் கேட்ச் ஆனார் ஜெய்ஸ்வால். அடுத்து படிக்கல் உள்ளே வந்தார்!
3வது ஓவரை வீசவந்தார் தீக்ஷானா. `தீக்ஷானா வரட்டும். திரை தீ பிடிக்கும்' என கடந்த மூன்று மேட்ச்களும் அனத்திக் கொண்டிருந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஓவரின் 3வது பந்தில், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும், அடுத்த பந்திலேயே ஷாட் தேர்டில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார் படிக்கல். படிக்கல் அடித்த அடியில்தான் தீ பிடித்தது. `உஃப் உஃப்' என ஊதி அனைக்க முயன்றுக்கொண்டிருந்தார் தீக்ஷானா. 4வது ஓவரை அற்புதமாக வீசிய ஆகாஷ் சிங், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் வந்தார் தீக்ஷானா. ஓவரின் 2வது பந்தை, லாங் ஆஃபில் சிக்ஸருக்கு பறக்கவைத்தார் பட்லர். 4வது பந்து, கவர்ஸில் பவுண்டரிக்கு விரட்டினார் படிக்கல். கடைசிப் பந்தை கவர் பாயின்ட்டில் இன்னொரு பவுண்டரிக்கு அடித்தார் பட்லர். `திரை தீ பிடிச்சதும் சொல்லுங்க. நான் டீ குடிச்சுட்டு வரேன்' என கிளம்பினார்கள் சென்னை ரசிகர்கள்.
பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம் துஷார். காலம் எவ்வளவு வேகமா சுழலது பார்த்தீங்களா! முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு பளாரென அடித்துவிட்டார் படிக்கல். பவர்ப்ளேயின் முடிவில் 57/1 என பிரமாதமாக முடித்திருந்தது ராயல்ஸ்.
7வது ஓவரை வீசவந்தார் ஜட்டு. முதல் பந்து, அகலப்பந்தில் ஓர் பவுண்டரி. 8வது ஓவரை வீசவந்த மொயின் அலியை, டீப் மிட் விக்கெட் திசையில் இரண்டு சிக்ஸரை வெளுத்துக்கட்டினார் பட்லர். ஜடேஜா வீசிய 9வது ஓவரில், படிக்கல்லின் விக்கெட் காலியானது. ஸ்வீப் ஆடுகிறேன் என டாப் எட்ஜாகி கான்வேயிடம் கேட்ச் கொடுத்து கிளம்பினார் படிக்கல். 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. கேப்டன் சஞ்சு களத்திற்குள் வந்தார். சஞ்சுவை அடுத்த இரண்டாவது பந்திலேயே செஞ்சுவிட்டார் ஜடேஜா. அட்டகாசமான பந்து, சாம்சனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஸ்டெம்பைத் தட்டித் தூக்கியது. சேப்பாக்கம் அலறியது. அஸ்வின், உள்ளே வந்தார். சந்தித்த முதல் பந்தே எட்ஜாகி, ஸ்லிப்பில் இருந்த மொயின் அலியின் கைக்குள் விழுந்தது. மிஸ் செய்துவிட்டார்.
10வது ஓவரை வீசினார் மகாலா. வெறும் 7 ரன்கள் மட்டுமே. 10 ஓவர் முடிவில், 95/3 என சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது ராயல்ஸ். 11வது ஓவரை வீசிய ஜடேஜா, 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மகாலா, 12வது ஓவரில் வெறும் 7 ரன்கள் கொடுத்தார். தனது ஸ்பெல்லின் கடைசி ஓவரை வீசிய ஜடேஜா, 6 ரன்களை கிள்ளிக் கொடுத்தார். கடந்த 3 ஓவர்களில் பவுண்டரிகள் ஏதும் இல்லை. 14வது ஓவரை வீசவந்தார் தீ பிடிக்கும் தீக்ஷானா. கவரின் பந்தைத் தட்டிவிட்டு ஓட முயற்சித்தார் அஸ்வின், அங்கிருந்த மொயின் அலி உருட்டி பிரட்டி எடுத்து அடித்தார். சரியாக, தோனியின் கைகளுக்கோ, ஸ்டெம்புக்கோ அடித்திருந்தால் அஸ்வின் காலி. ஆனால், மொயின் அலியோ ஸ்டெம்பிலிருந்து பர்லாங்கு தூரம் தள்ளி எரிந்தார். அஸ்வின் தப்பித்தார். அடுத்த பந்திலேயே, ஒரு பவுண்டரியை அடித்து அலி பாயிடம் கிக்கிபிக்கி காண்பிடித்தார் அஸ்வின்.
ஆகாஷ் சிங் வீசிய 15வது ஓவரில், டீப் பேக், டீப் மிட் விக்கெட் என இரண்டு சிக்ஸர்களை தூக்கி கடாசினார். கடைசிப்பந்தும் கொடியேற, கடைசியாக மகாலாவின் கைகளுக்குள் சிக்கியது. அஸ்வின் கிளம்பினார். பந்தை பிடித்ததில் விரல்களில் காயம் ஏற்பட, மகாலாவும் கிளம்பினார். தீக்ஷானா, பவுலிங்கில் அரைசதம் அடிப்பார் என ஆர்வமாக காத்திருந்தது ராயல்ஸ் அணி. ஆனால், 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4-0-42-0 என ஸ்பெல்லை முடித்தார் தீக்ஷானா. மொயின் வீசிய 17வது ஓவரின், இரண்டாவது பந்து, ஸ்டெம்ப் தெறித்தது பட்லருக்கு. கேட்ச், ரன் அவுட்களை மிஸ் செய்து சோகமாய் திரிந்த மொயின் அலி கடைசியாக மேட்ச்சுக்குள் வந்தார்.
18வது ஓவரை வீசினார் துஷார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பொளந்தார் ஹெட்மயர். ஆகாஷ் சிங்கின் 19வது ஓவரில் ஹெட்மயர் இன்னொரு சிக்ஸர் அடித்தார். அதேநேரம், கடைசிப்பந்தில் துருவ் ஜுரேலின் விக்கெட்டையும் கழட்டினார் ஆகாஷ். துஷார் வீசிய கடைசி ஓவரின், முதல் பந்தில் ஹெட்மயர் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில், ஹோல்டரின் விக்கெட்டை எடுத்தார். கடைசிப்பந்தில், ஜாம்பா ஒரு கேட்ச் கொடுக்க, மிஸ் செய்தார் தீக்ஷானா. மீண்டும் அதை பிடித்து தோனியிடம் எறிய, ரன் அவுட் அடித்தார் தோனி. 175/8 என இன்னிங்ஸை முடித்தது ராயல்ஸ் அணி.
சுழற்பந்துக்கு சாதகமான சென்னை பிட்சில், அஸ்வின், சஹல், ஜாம்பா என மும்மூர்த்திகளை இறக்கியிருந்தார் சாம்சன். எல்லாம் தோனியிடம் குடித்த யானைப்பால் என பெருமித புன்னகையை உதிர்த்தார்கள் சென்னை ரசிகர்கள். முதல் ஓவரை வீசவந்தார் பழம்பெரும் பவுலர் சந்தீப் சர்மா. ஐ.பி.எல் என்றதும் நினைவுக்கு வரும் முகங்களில் அவரும் ஒருவர். ருதுராஜும், கான்வேயும் அக்கவுன்ட்டை ஓபன் செய்தார்கள். முதல் ஓவரின் 5வது பந்தை ஷார்ட் ஃபைன் லெக்கில் பவுண்டரிக்கு அடித்தார் ருத்து. குல்தீப் சென் வீசிய 2வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சந்தீப் வீசிய 3வது ஓவரில், ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ருத்துராஜ். சென்னை ரசிகர்கள் நொந்துபோனார்கள். விசில்கள் காத்தாடியது. ரஹானே உள்ளே வந்தார். ஹோல்டர் வீசிய 4வது ஓவரில், ரஹானே ஒரு பவுண்டரியும், கான்வே ஒரு பவுண்டரியும் விளாசினர். ஜாம்பா வீசிய 5வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை ஸ்வீப்பாடி விரட்டினார் கான்வே. பவர் ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் அஸ்வின். பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரஹானே. அந்த ஷாட்டைப் பார்த்து அஸ்வினே அரண்டு போனார். தோனிக்காக வைத்திருக்கும் போர் கண்ட சிங்கம் பாட்டை, ரஹானேவுக்கு போட்டுவிடலாமா என டீஜேவின் கை பரபரத்திருக்கும். பவர்ப்ளேயின் முடிவில் 45/1 என சுமாராகவே தொடங்கியிருந்தது சென்னை அணி.
சஹல் வீசிய 7வது ஒவரில், லாங் ஆனில் ஒரு பவுண்டரி அடித்தார் கான்வே. ஹோல்டர் வீசிய 8வது ஓவரிலும், ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி அடித்தார். ஜாம்பா வீசிய 9வது ஓவரில், கவர் திசையில் ஒரு பவுண்டரியை விளாசினார் ரஹானே. 10வது ஓவரில், கேரம்பால் போட்டு ரஹானேவே பாக்கெட் பண்ணினார் அஸ்வின். எல்.பி.டபிள்யு! 10 ஓவர் முடிவில் 80/2 என உருண்டுக்கொண்டிருந்தது சென்னை. இன்னும் 60 பந்துகளில் 96 ரன்கள் தேவை.
குல்தீப் சென் வீசிய 11வது ஓவரில். 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 12 ஒவரை வீசவந்த அஸ்வினை, லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்தார் தூபே. ஆனால், அடுத்த பந்திலேயே அவரும் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். ரிவ்யூ எடுத்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் தூபே ஏனோ எடுக்கவில்லை. மொதல்ல, பிட்சை விட்டு கிளம்பினா போதும் என கிளம்பிவிட்டார். சஹல் வீசிய 13வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. 14வது ஓவரில், மொயின் அலியின் விக்கெட்டைத் தூக்கினார் ஜாம்பா. டாஸாக வந்த பந்தை, ஸ்வீப் ஆடி பேக்வார்ட் ஸ்கொயர் லெக்கில் இருந்த சந்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். ஓடிவந்து அற்புதமான கேட்சை எடுத்தார் சந்தீப். மகாலாவுக்கு பதில் இம்பாக்ட் வீரராக இறங்கினார் ராயுடு. 15வது ஓவரின் முதல் பந்திலேயே ராயுடுவை போயிடு என விரட்டிவிட்டார் சஹல். ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அதன்பிறகு, அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்த கான்வே, 37 பந்துகளில் தனது அரை சதத்தையும் நிறைவு செய்தார். 38வது பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டும் ஆனார். கான்வே அவுட் ஆனதும், ராயல்ஸ் ரசிகர்களோடு சேர்ந்து சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் துள்ளி குதித்து கொண்டாடினார்கள்.
ஆமாம், தோனி களத்துக்குள் வந்தார். இன்னும் 30 பந்துகளில் 63 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்கள் மட்டுமே. 7-க்கு பிறகு 8, தோனிக்கு பிறகு ஜட்டு. இருவரும் களத்தில். 16வது ஓவரை வீசிய அஸ்வின், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சென்னை ரசிகர்கள் பி.பி. மாத்திரையை தேடினார்கள். 17வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சஹல். புதிய சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். இதற்கு பழக்கப்பட்டிருந்த பழைய கைகள், அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஜாம்பா வீசிய 18வது ஓவரில், முதல் பந்து பவுண்டரி அடித்தார் தோனி. கூட்டல் அலறியது. 4வது பந்தில், டீப் விக்கெட்டில் ஒரு சிக்ஸர். சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சாமியாடினார்கள். 12 பந்துகளில் 40 ரன்கள் தேவை. ஹோல்டர் வீசிய முதல் இரண்டு பந்துகளில், இரண்டு சிங்கிள்கள். 3வது பந்தை தோனியின் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார் ஜடேஜா. 4வது பந்து, அகலப்பந்து. மாற்றாக வீசப்பட்ட பந்தில், டீப் கவரில் ஒரு சிக்ஸரை கடாசினார் ஜட்டு. 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை. அடுத்த பந்தில் ரன் ஏதுமில்லை. கடைசிப்பந்தில், மீண்டுமொரு சிக்ஸர். 6 பந்துகளில் 21 ரன்கள் என ஆட்டம் உயிர்ப்போடு இருந்தது.
சந்தீப் சர்மா, கடைசி ஓவரை வீசவந்தார். முதல் பந்து, அகலப்பந்து. இரண்டாவது பந்தும் அகலப்பந்து. சந்தீப்பின் முகத்தில் பதட்டம் நன்றாகவே தெரிந்தது. மாற்றாக வீசப்பட்ட முதல் பந்தில், ரன்கள் எதுவுமில்லை. அற்புதமான ஒரு யார்க்கரை இறக்கினார். தோனியால் அதை ஒன்றும் செய்யமுடியவில்லை. 2வது பந்து, ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு பறந்தது. 4 பந்துகளில் 13 ரன்கள் தேவை. 3வது பந்திலும் சிக்ஸர் அடித்தார் தோனி. ராயல்ஸ் ரசிகர்கள் அரண்டு போனார்கள். 4வது பந்தில் 1 சிங்கிள். தோனி ஓடுவதிலேயே தெரிந்தது, அவர் 100% ஃபிட்டாக இல்லையென்று. 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. `சிக்ஸ் அடித்து அண்ணனுக்கு செய்வார்டா ஜட்டு' என ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஜடேஜாவோ அடிக்க முயன்று, சிங்கிள் மட்டுமே எடுத்தார். அவருக்கு சமர்ப்பணம் பண்ற வெற்றியவும் அவரே அடிச்சு கொடுத்துதான் ஜெயிக்கணுமா என தலையில் கைவைத்தார்கள் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.
ஆனால், கடைசிப்பந்தில் இன்னொரு சிங்கிள் மட்டுமே கிடைக்க, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது ராயல்ஸ். `மிடில் ஓவர்களில் சென்னையின் மிடில் ஆர்டர் சொதப்பியதால் கிடைத்த தோல்வி. அண்ணனுக்கு நல்லா பண்ணீங்கடா' என வெறுப்பாகினர் சென்னை ரசிகர்கள். சேப்பாக் மைதானத்தில் 2008ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ராஜஸ்தான் சென்னையை வென்றிருக்கிறது. சென்னையின் பெருமை, மண்ணின் மைந்தன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.