நடப்பு ஐ.பி.எல் தொடரின் 33வது போட்டி, ஈடன் கார்டனில் நடந்ததா, இல்லை ஈ.ஏ.கிரிக்கெட் வீடியோ கேமில் நடந்ததா என குழம்புகிற அளவுக்கு நடந்து முடிந்தது. அப்படி என்னதான் நடந்தது. நடக்கவில்லை, எல்லாம் பறந்தது! டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. மைதானத்தில் குழுமியிருந்த மொத்த மஞ்சள் படையும், `அவசரப்பட்டியே குமாரு' என ஒருமித்த குரலில் அலறியது.
ருத்துவும் கான்வேயும் சென்னையின் ஆட்டத்தை துவங்க, முதல் ஓவரை வீசினார் உமேஷ். முதல் பந்தே, பவுண்டரிக்கு பறந்தது. ஒரு சோறு பதம்! வீசா வீசிய 2வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் கான்வே. இரண்டாவது சோறு பதம்! உமேஷ் யாதவின் 3வது ஓவரில், ருத்துராஜ் ஒரு சிக்ஸர். மூண்றாவது சோறும் பதம்! `இனி பதம் இல்லை வதம்' என மஞ்சள் சட்டையின் காலரைத் தூக்கிவிட்டார்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். வருண் வீசிய 4வது ஓவரில், கான்வே இன்னொரு சிக்ஸரும் அடித்தார். வீசா வீசிய 5வது ஓவரில், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் கான்வே. 3வது பந்தில், லாங் ஆஃபில் ஒரு பவுண்டரி. 6வது ஓவரின் கான்வே ஒரு பவுண்டரி, ருத்து ஒரு சிக்ஸர் விளாசி, பவுலர் கெஜ்ரோலியாவிடம் வெஜ்ரோல் கொடுத்தனுப்பி சாப்பிட்டு தெம்பாக வரச் சொன்னார்கள். பவர்ப்ளேயின் முடிவில் 59/0 என சிங்கநடைப் போட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நரைனின் 7வது ஓவரில், அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார் ருத்துராஜ். நைட் ரைடர்ஸின் நீரஜ் சோப்ரா, சுயாஷ் சர்மாவை அழைத்து வந்தார் கேப்டன் ராணா. 3வது பந்தில் போல்டானார் ருத்து. 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஹானே, அதே ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். நரைனின் 9வது ஓவரில், கான்வே இன்னொரு சிக்ஸரை அடித்தார். சுயாஷின் 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, 10 ஓவர் முடிவில் 94/1 என சிங்கநடைப் போட்டு சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தது சென்னை அணி.
11வது ஓவரை வீசிய வருண், கான்வேவுக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்தார். சுயாஷ் வீசிய 12வது ஓவரில், `அம்பயர் கால்' என நூழிலையில் எல்.பி.டபிள்யுவில் இருந்து தப்பித்தார் ரஹானே. அதே ஓவரில், பாயின்ட்டில் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார். வருண் வீசிய 13வது ஓவரில், கான்வே காலி! வீசாவிடம் கேட்ச் கொடுத்து 40 பந்துகளில் 56 என தொடர்ந்து 4வது அரைசதத்தை நிறைவு செய்து வெளியேறினார். அதே ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் டூபே. உமேஷ் வீசிய 14வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரஹானே. 3வது பந்தில் ஒரு பவுண்டரி. அழகான கிரிக்கெட் ஷாட்களையும், ஆக்ரோஷமான பேஸ்பால், டென்னிஸ், கோல்ஃப், கிட்டி ஷாட்களையும் கலந்து கட்டி ஆடினார் ரஹானே. வீசா வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை லாங் ஆனில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டூபே. அடுத்த பந்து, பவுண்டரி. 15 ஓவர் முடிவில், 160/2 என சிகரத்தை அடைந்து வானத்தை நோக்கி ஏறிகொண்டிருந்தது சென்னை அணி.
சுயாஷின் 16வது ஓவரில், ஒரு சிக்ஸரை விளாசினார் டூபே. 17வது ஓவரை வீச ரஸலை அழைத்தார் ராணா. 2வது பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரஹானே. ஓவரின் கடைசிப்பந்தில், ஒரு பவுண்டரியை தட்டி 24 பந்துகளில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். `நம்ம ரஹானேவுக்கு என்னதான் ஆச்சு' என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிரண்டு போனது. வெஜ்ரோல் உண்டுவிட்டு தெம்பாக வந்த கெஜ்ரோலியாவை, ஒரு சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் டூபே. ஆனால், வெஜ்ரோல் வேலையைக் காட்டியது. அடுத்த பந்திலேயே டூபே அவுட். ஜேசன் ராயிடம் கேட்ச் ஆனார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில், ரஹானே ஒரு பவுண்டரி அடித்தார்.
வருண் வீசிய 19வது ஓவரில், கடைசி மூன்று பந்துகளில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார் ரஹானே. கடைசி ஓவர் வீசவந்த கெஜ்ரோலியாவை சிக்ஸருடன் வரவேற்றார் ஜடேஜா. 3வது பந்தில் மற்றொரு சிக்ஸரை அடித்தவர், 4வது பந்தில் ரிங்குவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒட்டுமொத்த ஈடன் கார்டனும் `தோனி தோனி' என அலறியது. சந்தித்த முதல் பந்து, இடுப்புக்கு மேல் உயரமாக வந்து நோ பால் ஆனது. மாற்றாக வீசபட்ட பந்து, கனெக்ட் ஆகவில்லை. கடைசிப்பந்தில், 2 ரன்கள் மட்டுமே. மொத்தமாக, 20 ஓவர் முடிவில் 235/4 என வானத்தையும் அடைந்துவிட்டது சி.எஸ்.கே!
ஆடும் லெவனின் இருந்துகொண்டு பேட்டிங் இறங்காமல் டக்-அவுட்டிலேயே அமர்ந்திருந்த அம்பத்தி ராயுடுவை, அப்படியே அமர்ந்திருக்க சொல்லிவிட்டு ஆகாஷ் சிங்கை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் தோனி. அவர் முதல் ஓவரை வீச, இந்த முறை யாரை ஓபனிங் இறக்கிவிடலாம் என சீட்டு குலுக்கிப் போட்ட கேப்டன் ராணா, ஜெகதீசனையும் நரைனையும் இறக்கிவிட்டார். முதல் ஓவரின், 4வது பந்திலேயே நரைன் அவுட். க்ளீன் போல்ட்!
அடுத்து வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். தேஷ்பாண்டே வீசிய ஓவரின் 2வது பந்திலேயே ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜெகதீசன். ஆகாஷ் சிங் வீசிய 3வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார் வெங்கடேஷ் ஐயர். தேஷ்பாண்டேவின் 4வது ஓவரில், ராணாவும் ஒரு பவுண்டரி அடித்தார். ஆகாஷ் சிங்கின் 5வது ஓவரில், வெங்கடேஷ் ஐயர் ஒரு பவுண்டரியும், ராணா ஒரு பவுண்டரியும் அடித்தனர். 6வது ஓவர் வீசிய தீக்ஷானா 5 ரன்கள் மட்டுமே கொடுக்க, 38/2 என கூரையின் மேல் ஏணியைப் போட்டது கொல்கத்தா.
ஆகாஷ் வீசிய 7வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் ராணா. அடுத்த ஓவரில் மொயின் அலி வீசிய முதல் பந்திலேயே, வெங்கடேஷ் ஐயர் அவுட். எல்.பி.டபிள்யு! ரிவ்யூவை எடுத்துவிட்டு நடையைக் கட்டினார் வெங்கி. ஃபீல்டிங் செய்கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் ஓபனிங் இறங்காத ராய், அடுத்து களமிறங்கினார். இறங்கியதும், ஹாட்ரிக் சிக்ஸர்கள்! கொல்கத்தா ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி! 9வது ஓவரை வீசவந்தார் ஜடேஜா. முதல் பந்தில் ராணாவுக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்துவிட்டு, அடுத்த பந்தில் அவுட் செய்துவிட்டார். குட்டி மலிங்கா வீசிய 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில் 76/4 என கூரை மேல் குத்த வைத்து அமர்ந்திருந்தது கொல்கத்தா.
11வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஜடேஜாவை வரவேற்றார் ஜேசன் ராய். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரும் பறந்தது. 12 ஓவரில் தீக்ஷானாவையும் பவுண்டரியுடன் வரவேற்றார் ஜேசன் ராய். அதே ஓவரின் ஒரு சிக்ஸரும் பறந்தது. பாரபட்சம் பார்க்காமல் அடித்தார். ஜடேஜாவின் 13வது ஓவரில் ரிங்குவும் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் சேர்ந்தார். 42 பந்துகளில் 117 ரன்கள் வேண்டும். ஆனாலும், சென்னை ரசிகர்கள் பீதியில்தான் இருந்தார்கள். பதீரனாவின் 14வது ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டி, 19 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ஜேசன் ராய். தீக்ஷானாவின் 15வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் மீண்டும் பவுண்டரி அடித்தார் ராய். மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டானார்! 15 ஓவர் முடிவில் 137/5 என கூரையிலிருந்து நேராக வானத்தை நோக்கி ஏணியைப் போட்டது கொல்கத்தா.
தேஷ்பாண்டேவின் 16வது ஓவரில் ரிங்கு இரண்டு பவுண்டரிகளும், ரஸல் ஒரு சிக்ஸரும் அடித்தார். பதீரனா வீசிய 17வது ஓவரில், ரஸல் அவுட் ஆனார். 18வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ரிங்கு. அதே ஓவரில், வீசாவின் விக்கெட்டைத் தூக்கி ஆசுவாசமானார் தேஷ்பாண்டே. மீண்டும் எல்.பி.டபிள்யு! தோனி ரிவ்யூ சிஸ்டம் வேலை செய்தது. 19வது ஓவரில், தீக்ஷானாவின் சுழலில் சிக்கினார் உமேஷ் யாதவ். 6 பந்துகளில் 56 ரன்கள் தேவை. பதீரனாவின் கடைசி ஓவரில், ரிங்குவுக்கு அரைசதம் நிறைவு செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவுதான்! 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். பிட்சில் ஆட்டம் ஆடி 29 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த ரஹானேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தல ஹேப்பி அண்ணாச்சி!