சுப்மன் கில் - இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் என தொடர்ந்து அசத்திக்கொண்டிருக்கும் அவருக்கு, இந்த ஐபிஎல் சீசனில் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதலிரு சீசன்களிலும் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, டிரேட் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுவிட்டதால், இப்போது சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதல் இரண்டு சீசன்களிலுமே குஜராத் டைட்டன்ஸை ஹர்திக் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். முதல் சீசனில் கோப்பையும் வென்றார். அதனால் அவரது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே கருதப்பட்டது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ஹர்திக்கின் மும்பையை இந்தியன்ஸையே சந்தித்தது! இது கில்லின் கேப்டன்ஸி திறமையை அளவீடு செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே அந்தப் போட்டியை குஜராத் வெல்ல, கில்லின் தலைமைப் பன்பு பாராட்டப்பட்டது. மும்பை அணி வென்றுவிடும் நிலையில் இருந்தபோதும், கடைசி கட்டத்தில் குஜராத் அணி ஆட்டத்தை இழுத்துப் பிடித்து வென்றது. அதனால் கில் ஹர்திக் இடத்தை அப்படியே நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறார் கில்.
சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் சுப்மன் கில். குஜராத்துக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் பட்டையைக் கிளப்பினார்கள். அப்போது சுப்மன் கில் பெரிதாக எதுவும் திட்டம் தீட்டியதாகத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் எப்படி பௌலர்களைப் பயன்படுத்தினாரோ, அப்படியே இந்தப் போட்டியிலும் பயன்படுத்தினார். முதல் 12 ஓவர்கள், ஒரே மாதிரி ஓவர் கொடுத்தார்.
முதல் ஓவர்: அஸ்மத்துல்லா ஓமர்சாய்
இரண்டாவது ஓவர்: உமேஷ் யாதவ்
மூன்றாவது ஓவர்: அஸ்மத்துல்லா ஓமர்சாய்
நான்காவது ஓவர்: உமேஷ் யாதவ்
ஐந்தாவது ஓவர்: அஸ்மத்துல்லா ஓமர்சாய்
ஆறாவது ஓவர்: ரஷீத் கான்
ஏழாவது ஓவர்: சாய் கிஷோர்
எட்டாவது ஓவர்: ரஷீத் கான்
ஒன்பதாவது ஓவர்: சாய் கிஷோர்
பத்தாவது ஓவர்: ஸ்பென்சர் ஜான்சன்
11வது ஓவர்: சாய் கிஷோர்
12வது ஓவர்: மோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதல் 12 ஓவர்கள் இப்படித்தான் பௌலர்களைப் பயன்படுத்தினார் கில். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராகவும் எவ்வித மாற்றமும் இல்லாமல் முதல் 12 ஓவர்களை அப்படியே கொடுத்தார் கில். இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 13வது ஓவரில் தான் முதல் மாற்றம் வந்தது. மும்பைக்கு எதிராக 13வது ஓவரை சாய் கிஷோருக்குக் கொடுத்திருந்தார் கில். ஆனால் சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஸ்பென்சர் ஜான்சனுக்குக் கொடுத்தார். அதுவும் கூட சாய் கிஷோர் முந்தைய ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்ததால் தான் இந்த மாற்றம் நடந்தது. இல்லையெனில் மொத்த 20 ஓவர்களுமே கூட அப்படியே ரிப்பீட் மோடில் நடந்திருக்கலாம்.
இது கிரிக்கெட் அரங்கில் மிகவும் விநோதமான ஒன்றாக அமைந்திருக்கும். போட்டியின் சூழலுக்கு ஏற்ப கில் பந்துவீச்சாளர்களை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இருந்தாலும், மொத்தம் 2 போட்டிகள் மட்டுமே நடந்திருப்பதால் அவரது தலைமைப் பண்பைப் பற்றி முடிவெடுக்க இன்னும் சில காலம் காத்திருக்கவேண்டும்.