ஒரு பக்கம் கில் என்று பார்த்தால் மறுபக்கம் ஷமி, ரஷித், மோகித் என அச்சுறுத்தும் பவுலிங் கூட்டணி. பாண்டியா, மில்லர், சஹா போன்றோரிடம் இருந்து எல்லாம் பெரிய அளவில் ரன்கள் வராமலேயே குஜராத் இறுதி போட்டி வரை வந்துள்ளது. இவர்களும் அடிக்க ஆரம்பித்தால் குஜராத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலையில் குஜராத் உள்ளது. மறுபக்கம் சென்னையோ முழுக்க முழுக்க தோனியின் வியூகங்களையும் தங்களது சேப்பாக்கம் மைதானத்தையும் நம்பி இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. அனுபவ வீரர்களை இளம் ரத்தங்கள் எதிர்கொள்ளப் போகும் இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது.
அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் மற்றும் விக்கெட்டுகளை வைத்து வீரருக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் என இரண்டும் குஜராத் வீரர்கள் வசமே உள்ளன. குஜராத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணங்களுள் அந்த அணியின் துவக்க வீரர் சுப்மன் கில். கடந்த நான்கு போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டுக்கான வித்தியாசமான ஷாட்டுகள் எல்லாம் எதுவும் இல்லாமல் கவாஸ்கர் கால கிரிக்கெட்டை பயன்படுத்தியே இத்தனை ரன்கள் அவர் குவிப்பது கிரிக்கெட் உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக ரிஸ்கான ஷாட்டுகளை எல்லாம் அவர் ஆடாததால் அவரை அவுட் ஆக்குவதற்குள் எதிரணிக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. சென்னை அணி நிச்சயம் இவருக்கான திட்டத்துடன் வர வேண்டும். இல்லை என்றால் சென்னையும் ஒரு ஓரமாக நின்று கில் காட்டும் வான வேடிக்கைகளை பார்க்க வேண்டியது தான்.
குஜராத்தின் பிரச்சனை அந்த அணியின் மற்ற பேட்டிங் வீரர்கள். சஹா, பாண்டியா, மில்லர், டெவேட்டியா என யாரிடமும் இந்தாண்டு பெரிதாக ரன்கள் வரவில்லை. ஒரு வேளை சென்னை நாளை கில்லின் விக்கெட்டை வேகமாக எடுத்தால் இந்த நால்வரும் ஆடி ஆக வேண்டிய கட்டாயம் வரும். நால்வருமே ஸ்பின்னுக்கு தடுமாறும் ஆட்கள் என்பது சென்னைக்கு கூடுதல் மகிழ்ச்சியான விசயம்.
சென்னையின் பேட்டிங்கை பற்றி சொல்ல வேண்டும் என்றால் "ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனா பினிஷிங் சரியில்லையே ப்பா" என்று சொல்லிவிடலாம். ருத்ராஜ் மற்றும் கான்வே என இரண்டு ஓப்பனர்களும் இணைந்து ஆளுக்கு 500 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் மற்ற வீரர்கள் எல்லாம் பேட்டிங்கில் பெரிதாக கைகொடுக்கவில்லை என்பதே நிதர்சனம். சிவம் தூபே ஸ்பின்னர்களை அடித்து ஆடினாலும் அவரால் அதை அதிக நேரத்துக்கு செய்ய முடியவில்லை. ரயிலை பிடிக்கும் அவசரத்தில் இருப்பது போலவே ஆடுகிறார். மொயின் அலி 11 பேர் இருந்தால் தான் ஆட முடியும் என்ற விதிமுறை இருப்பதால் மட்டுமே அணியில் நீடிப்பது போல தெரிகிறது. கடந்த ஆண்டு IPL தொடரிலேயே நான் ஓய்வு பெறுகிறேன் என பேப்பர் போட்டார் ராயுடு. ஆனால் ஒரிஜினல் certificate-களை வைத்துக்கொண்டு சென்னை நிர்வாகம் தர மறுக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ராயுடு "என்னை விட்ருங்க யா...நான் போறேன்" என்று தேவர் மகன் கமல்ஹாசன் போலவே ஆடி வருகிறார். ஜடேஜா பற்றி சொல்லவே வேண்டாம். பேசாத சொந்தக்காரர் திருமணத்துக்கு கட்டாயத்தின் பேரில் வந்தது போலவே இருக்கிறது அவரது பேட்டிங். தோனியின் கடைசி இரண்டு சிக்சர்கள் வாட்சப் ஸ்டேட்டஸ்களுக்கு போதுமானதாக இருக்குமே தவிர ஆட்டத்தை வெல்ல போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை.
சென்னையின் பந்துவீச்சுக்கு அச்சாரமே ஸ்பின்னர்களும் தோனியின் அனுபவமும் தான். ஸ்பின்னுக்கு பெரிதாக சாதகம் இல்லாத குஜராத் மைதானத்தில் எப்படி தோனி தனது அஸ்திரங்களை செலுத்தப் போகிறார் என்பது தோனிக்கே வெளிச்சம். வேகப்பந்து வீச்சில் கில்லை அவுட் ஆக்கும் திறமை படைத்தவர் தீபக் சஹார். அவரின் ஸ்விங் பந்துகளில் பல முன்னணி வீரர்கள் வீழ்வது கண்கூடு. தோனியின் செல்லப்பிள்ளை பதிரானா டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக வீசுகிறார். ஆனால் அதை ஈடு செய்ய தேஷ்பாண்டே இருக்கிறாரே என்பது தான் சென்னை ரசிகர்களுக்கு ஒரே பிரச்சனை. மற்றொரு இலங்கை வீரர் தீக்ஷனாவும் சிறப்பாக வீசும் பட்சத்தில் குஜராத்துக்கு பிரச்னை தான்.
குஜராத்தின் பந்துவீச்சை பற்றி பெரிதாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே ஷமி, ரஷித் மற்றும் மோகித் ஆகியோர் உள்ளனர். இது போக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கும் மற்றொரு 'என்றும் 16' நூர் அகமத் உள்ளார். கேப்டன் பாண்டியாவும் கடந்து போட்டியில் பந்து வீசினார். அயர்லாந்தின் இளம் நட்சத்திரம் ஜாஸ் லிட்டிலும் அணியில் இணைந்துள்ளார்.
இத்தனை நட்சத்திர பந்து வீச்சாளர்கள் இருப்பதால் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் யோசிக்காமல் சீட்டு குலுக்கி போட்டு எடுத்துக் கூட குஜராத் பந்து வீசலாம். அத்தனை வலிமையான பந்துவீச்சு அவர்களிடம் உள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியின் முடிவைப் பார்க்கும் போது, குஜராத் டைட்டன்ஸுக்கு மீண்டும் ஃபர்ஸ்ட் பேட்டிங் வாய்ப்புக் கிடைத்தால், அதை மகிழ்வுடன் செய்யவே விரும்புவார்கள் என்று தெரிகிறது. அதே சமயம், இன்று மழைக்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும் டியூ இருக்கும் என்பதால், மாலை மைதானத்தின் தன்மை கருதி முடிவுகள் மாற்றப்படலாம் என்பதில் ஐயமில்லை.
கடந்த 12 ஃபைனல்களில், குவாலிஃபயர் 1 வென்ற அணியே, 9 முறை கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே அடுத்த இந்திய அணியின் கேப்டன் பாண்டியா தான் என்று சலசலப்புகள் உள்ளன. பாண்டியா கோப்பை வெல்லும் பட்சத்தில் அந்தக் கூற்று மெய்யாக வாய்ப்புகள் அதிகரிக்கும். அதுவே தோனி வெல்லும் பட்சத்தில் இத்தனை ஆண்டுகள் சென்னையின் முகமாக திகழ்ந்த தோனிக்கு சரியான பிரிவு உபச்சாரமாய் இருக்கும். அதிரடியா அல்லது அனுபவமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கான்வே, ருத்துராஜ், ரஹானே, டூபே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா, பதிரனா
கில், சாஹா, சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத், நூர் அஹமது, ஷமி, மோஹித் ஷர்மா, லிட்டில்