இன்று கிரிக்கெட் ரசிகர்களைத் தாண்டி பலரும் முணுமுணுப்பது சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாட இருக்கும் போட்டியைத்தான். ’பெங்களூருவில் இன்று கனமழை பெய்யும்’ என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மதியம் முதல் அங்கு மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. இதனால் போட்டி நடைபெறுமா, ஓவர்கள் குறைக்கப்படுமா என்கிற செய்திகளே அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ’கிங்’ விராட் கோலியின் ரசிகர்கள் நேற்று முதலே ‘சிஎஸ்கே தோற்கும்’ எனக் கருத்துகளைப் பதிவிட்டு சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகின்றனர். அதற்கு ஒரு புள்ளி விவரத்தையும் புதிதாகக் கிளப்பி உள்ளனர்.
அதாவது, ஐபிஎல் வரலாற்றில் மே 18-ஆம் தேதி அன்று நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் இதுவரை ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததே இல்லையாம். இதுவரை மே 18-ஆம் தேதிகளில் நடைபெற்ற நான்கு போட்டிகளில், ஆர்சிபி அணி விளையாடி இருப்பதுடன், அந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறதாம். அதிலும், இரண்டு போட்டிகள் மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டதிலும் வெற்றிபெற்றுள்ளதாம்.
இதில் 2 போட்டிகள் சென்னை அணிக்கு எதிராக 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வெற்றிபெற்றுள்ளதாம். அடுத்து 2016இல் பஞ்சாப் அணி அணியையும், 2023இல் ஹைதராபாத் அணியையும் வீழ்த்தியுள்ளதாம். இன்னும் சொல்லப்போனால், அந்த 4 போட்டிகளிலும் விராட் கோலி, ரன் வேட்டையை நிகழ்த்திக் காட்டி இருந்தாராம். அந்த 4 போட்டிகளில் 2 சதமும் ஒரு அரைசதமும் அடக்கம் என இந்தப் புள்ளிவிவரத்துடன் கோலியையும், ஆர்சிபியையும் உயர்த்திப் பேசும் அவ்வணி ரசிகர்கள், ‘சிஎஸ்கே தோற்பது உறுதி’ என்கிற கருத்துகளையும் பதிவிட்டு இணையத்தை வைரலாக்கி வருகின்றனர்.