`பாய்ஸ் உருட்டுக்கட்டை, துடைப்பங்கட்டை, கர்லாக்கட்டை. மூனையும் எடுத்துக்கோங்க' என்றார் வார்னர். `எதுக்கு பாஸ்' என ப்ருத்வி ஷா கேட்க, `குட் கொஸ்டின். நாம சென்னை சூப்பர் கிங்ஸோட பிளே ஆஃப் பார்ட்டியை கெடுத்துவிடப் போறோம்' என்றார் வார்னர். `அவங்கள கட்டையால அடிக்கப்போறோமா பாஸ்' என கலீல் அகமது கேட்க, `அது அநாவசியம். அவங்க முன்னாடி நின்னு நம்மள நாமே அடிச்சுக்கப் போறோம். அதைப் பார்த்து பரிதாபத்துல அவங்க தோற்கணும்' என வார்னர் கண் கலங்க சொல்ல, `ஒகே பாஸ்' என்றனர் டெல்லி கேபிடல்ஸ் கோரஸாக.
நேற்று மதியம் டெல்லியின் திகில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஆட்டத்தை சென்னை வென்றால், பிளே ஆஃப் உறுதி! தல `தல' என கேட்டு டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்களே சூப்பர் கிங்ஸுக்கு ஆதரவாக அலறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், `லெவனில் எந்த மாற்றமும் இல்லை' என தோனி சொன்னதும், சென்னை ரசிகர்கள் டெல்லி ஆதரவாளர்களாக மாறினர்.
ருத்து - கான்வே ஜோடி சென்னையின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசினார் கலீல் அகமது. ருத்து ஒரு பவுண்டரி அடித்தார். 2வது ஓவரை வீச வந்தார் சுழற்பந்து வீச்சாளர் லலித் யாதவ் வீச, ருத்து ஒரு பவுண்டரியும், கான்வே ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர். இதுதான் இந்த ஐ.பி.எல் தொடரின் ஆயிரமாவது சிக்ஸர். கலீலின் 3வது ஓவரில் கான்வே அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை சிதறவிட்டார். அக்ஸரின் 4வது ஓவரில் ருத்து அடித்தார் ஒரு சிக்ஸர். 5வது ஓவரை வீசிய நோர்க்யாவையும், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து அரளவிட்டார் கான்வே. 6வது ஓவரை வீசிய சக்காரியா 2 ரன்கள் மட்டுமே கொடுக்க, 52/0 என சிறப்பாக பவர்ப்ளேயை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
குல்தீப்பின் 7வது ஓவரில், ருத்து ஒரு பவுண்டரி தட்டினார். அக்ஸரின் 8வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே. குல்தீப்பின் 9வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே. அக்ஸர் வீசிய அடுத்த ஓவரில் அமால் டுமால் என இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ருத்து. அதே ஓவரில், அவரது அரைசதமும் வந்தடைந்தது. 10 ஓவர் முடிவில் 87/0 என லேசாக சுனக்கம் காட்டியிருந்தது சி.எஸ்.கே.
சக்காரியாவின் 11வது ஓவரில் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கான்வே. ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என அடித்தால் இரண்டு பவுண்டரிகளாகதான் அடிக்கிறார் அண்ணாச்சி. குல்தீப் வீசிய 12வது ஓவரில், ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து துவைத்தார் ருத்து. `ஏன் நல்லா ஆடுறீங்க. சீக்கிரம் அவுட் ஆவுங்க. நாங்க தலய பார்க்கணும்' என சென்னை ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள்.
நோர்க்யாவின் 13வது ஓவர் கடைசிப் பந்து, இன்னொரு சிக்ஸரும் பறந்தது ருத்துவின் பேட்டிலிருந்து. கலீல் அகமதின் 14வது ஓவரை சிக்ஸருடனே துவங்கினார் கான்வே. அந்த ஓவரில் கான்வேவுக்கு இன்னொரு பவுண்டரியும் கிடைத்தது. 15வது ஓவரில் ஒரு வழியாக ருத்துவின் விக்கெட்டைத் தூக்கினார் சக்காரியா.
50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த ருத்து, டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்த ரூஸோவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அவ்வளவுதான், ஒட்டுமொத்த மைதானமும் `தோனி தோனி' என கத்த துவங்கியது. களமிறங்கினார் டூபே! 15 ஓவர் முடிவில் 148/1 என டாப் கியரில் பறந்தது சி.எஸ்.கே.
லலித் யாதவின் 16வது ஓவரில், கான்வே இரண்டு பவுண்டரிகளும், டூபே ஒரு சிக்ஸரும் அடித்தனர். நோர்க்யாவின் 17வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய கான்வே, ஒரு சிக்ஸரும் அடித்தார்.
கலீல் அகமதின் 18வது ஓவரில், டூபே பளார் பளார் என இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். `சீக்கிரம் அவுட் ஆவுங்க ப்ரோ. இன்னும் ரெண்டு ஓவர்தான் இருக்கு' என மைதானத்திலேயே அடம் பிடித்து அழ ஆரம்பித்தார்கள் சென்னை ரசிகர்கள். சி.எஸ்.கே ரசிகர்கள் அழுது புரண்டதில், 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஷிவம் டூபே அவுட்டாகி கிளம்பினார். சென்னை ரசிகர்கள் துள்ளி குதித்தனர்.
19வது ஓவரின் 2வது பந்து கான்வே 87 ரன்களில் அவுட்டாக, மீண்டும் சென்னை ரசிகர்கள் துள்ளி குதித்தனர். பிறகு, தோனி ஏற்கனவே களமிறங்கிவிட்டார் என்பது நினைவுக்கு வரவே, சடாரென சோக மூடுக்கு மாறினார்கள். `ஆள வேண்டாம் என்றுதான் நினைத்தோம்' என கான்வேயிடம் மன்னிப்பு கேட்டார்கள். அடுத்து களமிறங்கிய ஜடேஜா, மன நிம்மதியுடன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார்.
சக்காரியாவின் கடைசி ஓவரில் அற்புதமாக அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த ஜடேஜாவிடம், `சிங்கிள் சிங்கிள்' என கத்தினார்கள் சி.எஸ்.கே ரசிகர்கள். வெறுப்பான ஜடேஜா, வேண்டுமென்றே 5வது பந்தில்தான் சிங்கிள் தட்டினார். இப்போது `சிக்ஸர் சிக்ஸர்' என கதறினார்கள் சென்னை ரசிகர்கள். கடைசி பந்தை ரொம்ப நேரமாக வீசிக்கொண்டிருந்த சக்காரியா, கடைசியில் சிங்கிள் மட்டுமே கொடுத்தார். `அடுத்த ஓவர் தலதான் ஸ்டிரைக்' என சென்னை ரசிகர்கள் உற்சாக குரலில் சிரிக்கும்போது, ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 223-3 என சிறப்பான இலக்கை நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் துக்கடா இலக்கை எட்டிபிடிக்க களமிறங்கியது டெல்லி கேபிடல்ஸ்.
கலீல் அகமதுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஷாவுடன் ஓபன் செய்தார் வார்னர். முதல் ஓவரை வீசிய தீபக் சாஹர், ஷாவுக்கு ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தேஷ்பாண்டேவின் 2வது ஓவரில், ஷாவின் விக்கெட் காலி. சூப்பர் மேன் கேட்ச் பிடித்தார் ராயுடு! 3வது ஓவரை வீசிய தீபக், 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். துஷாரின் 4வது ஓவரில் வார்னர் ஒரு பவுண்டரி அடித்தார். சாஹரின் 5வது ஓவரை ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் தொடங்கினார் வார்னர்.
அந்த ஓவரில் வார்னர் ஒரு சிங்கிள் தட்டி டைவ் அடித்து ஸ்டிரைக் மாற, ஃபீல்டர் பந்தை எடுத்து ஸ்டெம்ப்பை நோக்கி எறிந்தார். அது ஸ்டெம்ப்பை தட்டாமல் நேராக ஜடேஜாவின் கைக்கு வர, வார்னர் எழுந்து மீண்டும் ஓடுவது போல் பாவனை செய்ய, ஜட்டுவும் பந்தை எறிவது போல் பாவனை செய்தார். அப்போது திடீரென வார்னர், ஜடேஜாவின் வாள் சுற்றும் செலிப்ரேஷனை செய்து காட்ட, ஜடேஜாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. மொத்த டெல்லி மைதானமும் உற்சாகத்தில் உள்ளம் பூரித்தது.
தீக்ஷானாவின் 6வது ஓவரின் கடைசிப்பந்து, வார்னர் ஒரு சிக்ஸர் அடிக்க, பவர்ப்ளேயின் முடிவில் 34/3 என பரிதாபமாக ஆடியது டெல்லி.
ஜடேஜா வீசிய 7வது ஓவரிஅ பவுண்டரியுடன் தொடங்கினார் யாஷ் துல். தீக்ஷானாவின் 8வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ஜடேஜாவின் 9வது ஓவரில் வார்னர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வாள் சுத்தினார். தீக்ஷானவின் 10வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் வார்னர். 10 ஓவர் முடிவில் 72/3 என மெல்ல எட்டிப்பார்த்தது டெல்லி.
ஜடேஜாவின் 11வது ஓவரில், துல்லின் விக்கெட் காலி. வந்தார் குட்டி மலிங்கா! பதீரனாவின் 12வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் அக்ஸர். 13வது ஒவரை மீண்டும் ஜடேஜா வீச, சிக்ஸருடன் துவங்கினார் அக்ஸர். ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என வார்னரும் அடித்து நொறுக்கினார். தீபக்கின் 14வது ஓவரில் அக்ஸர் படேலும் அவுட். சிரித்தபடி நடையைக் கட்டினார். பதீரனாவின் 15வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15 ஓவர் முடிவில் 116/5 என தவழ்ந்துக்கொண்டிருந்தது டெல்லி. இன்னும் 30 பந்துகளில் 108 ரன்கள் தேவை.
அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், இரண்டாம் இடத்தை தக்க வைக்கலாம் என சென்னை அணி மகிழ்ச்சி அடைய, 16வது ஓவரை வீசினார் துஷார். அமான் கானுக்கு ஒரு பவுண்டரி. வார்னருக்கு இரண்டு பவுண்டரிகள். பதீரனாவின் 17வது ஓவர், முதல் பந்திலேயே அமான் கான் அவுட். கேட்ச் பிடித்தார் மொயின் அலி. துஷாரின் 17வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே. 12 பந்துகளில் 81 ரன்கள் தேவை. 19வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னரின் விக்கெட்டையும் தூக்கினார் பதீரனா.
கடைசி ஓவரை வீசிய தீக்ஷானா லலித் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் கழட்டினார். ஹாட்ரிக் பந்தை சக்காரியாவும் பேடில் வாங்க, அது அவுட் இல்லை என தெரிந்தும் ரிவ்யூவுக்கு போனார் தோனி. விக்கெட் இல்லை! கடைசிப் பந்தில் மீண்டும் பேடில் பட, ஒரு கையைத் தூக்கினார் நடுவர்.
இம்முறை மேல் முறையீட்டுக்கு போனார் சக்காரியா. `நீங்க ரிசல்ட் பார்த்துட்டு வாங்க தம்பி' என 77 ரன் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்று பிளே ஆஃபுக்கு கிளம்பியது சென்னை சூப்பர் கிங்ஸ். 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து, இரண்டு கேட்ச்களையும் பிடித்து ருத்துவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சொல்ல மறந்துவிட்டோம், சக்காரியாவுக்கு நாட் அவுட் என ரிசல்ட் வந்தது.
இந்த காமெடியைக் கண்டு கவனம் சிதறிய சால்ட், அடுத்த பந்திலேயே ரஹானேவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அடுத்து களமிறங்கிய ரூஸோவும் தங்க வாத்து ஒன்றைப் பெற்றுக்கொண்டு தென்னாப்ரிக்கவுக்கு கிளம்ப ஆயத்தமானார்.