உலக அளவில் ‘தல’ தோனிக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதற்கு உதாரணமாய், கொரோனாவிற்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் தற்போதைய ஐபிஎல் சீசனில் அவருடைய மஞ்சள் படையைக் காணலாம். சென்னையில் நடக்கும் போட்டிகள் தவிர, இதர மைதானங்களிலும் மஞ்சள் படை குழுமி, ‘தோனி... தோனி...’ எனக் குரல் எழுப்பி வருகிறது.
இதை கடைசியாய் நடைபெற்ற ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானங்களில் கண்டுகளித்திருக்கலாம். இதுகுறித்து பிற ஐபில் கேப்டன்களே மனம் திறந்து பேசியுள்ளானர். குறிப்பாக, பெங்களூரு அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி, “ஐபிஎல்லில், சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதுதான் தமக்கு அதிகம் பிடிக்கும். அதற்குக் காரணம், அவ்வணியில்தான் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைவிடக் கூடுதலாய் சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமே முழுக்க முழுக்க தோனியின் ரசிகர்களே நிரம்பியிருப்பர். அந்த வகையில், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்கள் படை மைதானத்தை நிறைத்திருந்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் 41வது லீக் போட்டி, இன்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த தோனி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டெவான் கான்வே ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்தார். 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறக்கி இருந்தார். அந்த வகையில், கடைசி ஓவரில் ஜடேஜா 12 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுக்க, ‘தல’ கேப்டன் தோனி களமிறங்கினார். ஜடேஜா அவுட்டானதைப் பற்றிக்கூட கவலைப்படாத ரசிகர்கள், தோனி களமிறங்கியதும் ‘தோனி... தோனி’ என வாய்மொழியுடன் கரவொலியும் மைதானத்தைத் தாண்டி எதிரொலித்தது. மறுபுறம், கடைசி 2 பந்துகளைச் சந்தித்த தோனி, தன்னுடைய ஸ்டைல் மூலம் அந்த 2 பந்துகளையும் சிக்ஸருக்கு அமர்க்களப்படுத்தினார். தோனி, மைதானத்துக்குள் இருப்பதற்கே குரல் கொடுக்கும் ரசிகர் கூட்டம், அவர் சிக்ஸர் அடித்தால் சொல்லவா வேண்டும். ’தோனி’ என்கிற சத்தம் வானம் அதிருமளவுக்குக் காதைப் பிளந்தது.
இன்னும் சொல்லப்போனால், இடி சத்தத்தைவிட, ’தோனி’ என்று ஒலித்த குரல்களே அதிகமாக இருந்தது.
மறுமுனையில் 92 ரன்கள் அடித்து தனியொருவனாய் ஜொலித்துக் கொண்டிருந்த டெவான் கான்வேகூட, கடைசி நேரத்தில் தோனி அடித்த 2 சிக்ஸரால், ரசிகர்கள் எல்லாம் அவர் (தோனி) பக்கம் திரும்பியதைக் கண்டு அசந்து போயிருப்பார். ஆம், இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பைத்தான் தோனி போக்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான், ‘தோனி ஓய்வெடுக்கக்கூடாது’ என்கிற பதாகைகள் எங்குப் பார்த்தாலும் நிரம்பி வழிகின்றன.
இந்த ஐபிஎல்லுடன் தோனி, ஓய்வுபெறுவார் எனச் சிலர் சொல்வதால்தான் இப்படியான பதாகைகள் தோனிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. ஆம், இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் தோனியும், "இது போதும்... எனக்கு இது போதுமே” என சென்னை அணிக்காக ஆடிவருகிறார்.