சென்னை அணி தனது முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. தொடரின் 53 ஆவது லீக் ஆட்டமான இந்த போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரண் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்மூலம் முதல் 11 போட்டிகளில் அதிகமாக டாஸ் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பகிர்ந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2022 ஆம் ஆண்டு தொடரில் முதல் 11 போட்டிகளில் 10 போட்டியில் டாஸை தோற்று இருந்தது. இந்நிலையில் சென்னை அணியும் முதல் 11 போட்டிகளில் 10 முறை டாஸை இழந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளது.
இதனை அடுத்து முதலில் களமிறங்கினர் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் மற்றும் ரஹானே களமிறங்கினர். சரியான பார்மில் இல்லாத ரஹானே இம்முறையும் 2 ஆவது ஓவரிலேயே அவுட்டானார். எனினும் சென்னை அணிக்கு ருதுராஜ் மற்றும் மிட்செல் சிறப்பாக அணியை கட்டமைத்தனர். பவர் ப்ளே முடிவில் சென்னை அணி 60 ரன்களை குவித்து 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
நிலையாக ஆடிக்கொண்டிருந்த கெய்க்வாட், ராகுல் சாஹரின் பந்தில் வீழ்ந்தார். பின் வந்த துபேவும் வந்த வேகத்திலேயே டக் ஆகி நடையைக் கட்ட, திணற ஆரம்பித்தது சென்னை. துபேவிற்கு தொடர்ச்சியாக இது இரண்டாவது டக் அவுட். எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் 30 ரன்களில் வெளியேற, திணறிக்கொண்டிருந்த மொயின் அலியும் 17 ரன்களுக்கு அவுட்டானார்.
பவர்ப்ளேவுக்குப் பின் தனது ஆட்டத்தை மொத்தமாக இழந்தது சென்னை. 16 ஆவது ஓவர் முடிவில் சென்னை அணி 122 க்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது. இதனை அடுத்து ஜடேஜாவும் ஷர்துல் தாக்கூரும் அதிரடிக்கு திரும்பினர். ஓவருக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கிடைத்த வண்ணம் இருந்தது. ஆனால் ஹர்ஷல் வீசிய 19 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் தாக்கூர் போல்ட் ஆக, பின் வந்த தோனி டக் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்திருந்தது.
ஆரம்பத்தில் அட்டகாசமாக ஆரம்பித்த சென்னை அணி 8 முதல் 16 என்ற மிடில் ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 53 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. டெத் ஓவர்களான 17 முதல் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 45 ரன்களை எடுத்திருந்தது.
பஞ்சாப் அணிக்கு ராகுல் மற்றும் ஹர்ஷல் மட்டுமே இணைந்து 6 விக்கெட்களை எடுத்துள்ளனர். மொத்தமாக 8 ஓவர்களை வீசியுள்ள அவர்கள் 47 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது சென்னை அணிக்கு சிக்கலாக அமைந்தது.
ராகுல் சாஹர் சென்னைக்கு எதிராக எமதர்மனாகவே இருந்துள்ளார். 13 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் தோனிக்கும் தலைவலியாக இருந்துள்ளார் ஹர்ஷல் படேல். ஹர்ஷல் படேலின் 25 பந்துகளை எதிர்கொண்டுள்ள தோனி 33 ரன்களை மட்டுமே எடுத்து 3 முறை அவுட்டாகியுள்ளார்.
168 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.