ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் குஜராத், சென்னை, லக்னோ அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், விவ்ரந்த் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஐதராபாத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 14 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து கேமரூன் கிரீனும் தன் பங்குக்கு அதிரடியில் மிரட்டினார். அரைசதம் கடந்த கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
அங்கு தொடங்கி கேமரூனும் சூர்யகுமார் யாதவும் கடைசி வரை ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் சதம் அடித்து அசத்தினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இன்றைய ஆட்டத்தில் மட்டும் இவர், 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.