நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளின் தொடக்க வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கலக்கிவரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக இருக்கும் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த போட்டிகளின் போது அரைசதமடித்த ரோகித் சர்மா கூட, விராட் கோலியின் மந்தமான ஆட்டத்தால் அழுத்தத்தை சந்திக்கிறார், விராட் கோலி சிறப்பாக ஆடவேண்டும் இல்லையேல் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்குங்கள் என்ற விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 24 பந்துகளுக்கு 24 ரன்கள் அடித்தபோதும் கூட விராட் கோலி பலமாக திரும்பிவருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரயன் லாரா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நீண்ட நேரம் மிடில் ஓவரில் தங்கினார், அதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது என்றும், விரைவில் விராட் கோலி பலமாக திரும்பிவருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் பேட்டிங் பர்ஃபாமன்ஸ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் வலுவாக திரும்பிவருவார் என்று பிரயன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோலி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் லாரா, “24 பந்துகளில் 24 ரன்கள் என்பது விராட் கோலியின் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறது. இருப்பினும் அவருடைய ஆட்டத்தில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் மிடில் ஓவர்களில் நிலைத்து நின்று அதிகப்படியான நேரத்தை செலவிட்டார். இது இந்தியாவை பொறுத்தவரை நல்ல அறிகுறி, விராட் கோலி நடுவில் நிலைத்து நின்று ஆடுவது இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளது என்பதை காட்டுகிறது. கோலி தொடர்ந்து வலுவாக திரும்பிவருவார் என்று நான் நம்புகிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “அவர் அடுத்ததாக வங்கதேசத்திற்கு எதிராக விளையாட ஆன்டிகுவாவிற்கு செல்கிறார், அங்கு அவர் நிலைத்துநின்று பேட்டிங் செய்து நிறைய ரன்களை நிச்சயம் எடுத்துவருவார். அதுவரை நாம் அவருடன் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் இன்னும் பல ஆட்டங்கள் மீதமுள்ளன, அதில் அவருடைய வலுவான ஆட்டங்களை நாம் நிறைய பார்க்கவிருக்கிறோம்” என்று லாரா கோலிக்கு ஆதரவான வார்த்தைகளை உதிர்த்தார்.