நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இந்தச் சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் போட்டியின் முடிவே, ஆஸ்திரேலியாவை அடுத்தகட்டத்திற்குக் செல்லுமா செல்லாதா என்பதை தீர்மானிக்கு போட்டியாக அமைந்தது.
அதன்படி, இன்று ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வங்கதேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்று முதல்முறையாக உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறி சரித்திரம் படைத்துள்ளது. அதேநேரத்தில், இன்றையப் போட்டியில் பல களேபரங்கள் நடந்தன. அதில் ஒன்று, ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜனார்த்தனன் டிராட் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டக் அவுட்டில் நின்றிருந்த ஜனார்த்தனன் டிராட், மைதானத்தில் நின்றிருந்த வீரர்களைப் பார்த்து, தன் கைகளால் ‘மழை பொழிகிறது ஆட்டத்தைத் தாமதப்படுத்துங்கள்’ என்று கூறுகிறார். இதனை பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர்களும் அடுத்து ஒரு பெரிய நாடகத்தைப் போட்டனர். நூர் அகமத் பந்து வீசி கொண்டிருந்தபோது ஸ்லிப்பில் நின்ற குலாப்தீன் திடீரென்று காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது என்று கூறி கீழே விழுந்தார். அந்தச் சூழலில் வங்கதேச அணி 2 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், மழையும் அதிகரிக்க தொடங்கியது. இதனை அடுத்து போட்டியை நடுவர்கள் நிறுத்தினர்.
இதை அடுத்து மீண்டும் 10 நிமிடம் கழித்து போட்டி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ஓவர் குறைக்கப்பட்டு இலக்கு 114 ரன்கள் ஆக மாற்றப்பட்டது. முடிவில் வங்கதேச அணி 105 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் திறமையாக விளையாடிச் செயல்பட்டாலும் கிரிக்கெட்டின் விதிகளை பயன்படுத்தி சூழ்ச்சியும் செய்திருப்பது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தவிர, நெட்டிசன்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், ‘எனக்கெல்லாம் காயம்பட்டால் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டி உள்ளது. ஆனால், உங்களுக்கு மட்டும் உடனே குணமானது எப்படி’ எனக் கேள்வியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘நல்ல நடிப்புடா சாமி’ எனத்தான் கிண்டலடித்து வருகின்றனர்.