கிரிக்கெட்டில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், சமீபத்தில் மூன்றாவது அம்பயர்களின் முடிவுகள் மற்றும் DRS முடிவுகள் பல்வேறு போட்டிகளில் விவாதத்திற்குரிய ஒன்றாக மாறிவருகிறது.
சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் DRS மற்றும் ஹாக்-ஐ ஆப்ரேட்டர் சிஸ்டம் இரண்டையும் இங்கிலாந்து வீரர்கள் மிகப்பெரியளவில் விமர்சனம் செய்தனர். அதேபோல வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூட “பந்து பேட்டில் பட்டு சென்றது DRS சிஸ்டத்தில் தெரிந்தபோதும் பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது” விவாதமானது.
இந்நிலையில்தான், 2024 ஐபில் தொடரில் களத்தில் அம்பயர்கள் எடுக்கப்படும் முடிவுகளில் அதிகப்படியான நம்பகத்தன்மை மற்றும் கூர்மையான முடிவுகளை உறுதிசெய்யும் வகையில், ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் (Smart Replay System) எனப்படும் புதிய அதிநவீன சிஸ்டமை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மைதானத்தின் பல்வேறு இடங்களில் 8 அதிநவீன ஹாக்-ஐ கேமராக்கள் பொறுத்தப்பட்டு, கிரவுண்ட் கேட்சுகள், ஸ்டம்பிங், ரன்-அவுட்கள், கேட்சுகள் மற்றும் ஓவர்த்ரோக்கள் என அனைத்திற்கும் பலகோணங்களில் பிடிக்கப்பட்ட காட்சிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படும். 8 கேமராக்கள் தாண்டி 3வது அம்பயரின் அறையில் இரண்டு ஹாக்-ஐ கேமராக்கள் பொறுத்தப்பட்டு, திரையில் பலகோணங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேர காட்சிகள் அடிப்படையில் களநடுவர்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். ஹாக்-ஐ ஆப்ரேட்டர்களுடன் நேரடி உரையாடலை மேற்கொள்ளும் அம்சமும், அதை பார்வையாளர்களான ரசிகர்களும் காணும்படியான அணுகலை ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் (Smart Replay System) அளிக்கிறது.
இந்தபுதிய சிஸ்டம் அறிமுகமாகி கிரிக்கெட் வல்லுநர்களின் வரவேற்பை பெற்றநிலையில், ஏற்கனவே அதிகப்படியான சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் ”இடுப்பு உயர நோ-பால்” பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்ப அம்சத்தை பிசிசிஐ கையில் எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடுப்பு உயர நோ-பால் என்பது முக்கியமான ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் பவுலர்கள் அழுத்தத்தில் புல் டாஸ் பந்துகளை மிகவும் உயரமாக வீச, அது இடுப்புக்கு மேலே சென்றதாக பேட்ஸ்மேனுக்கும், அதிக உயரத்தில் செல்லவில்லை என்று பந்துவீச்சு அணிக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதை பல்வேறு போட்டிகளில் பார்த்துள்ளோம்.
இத்தகைய விவாதத்திற்குரிய சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஐபிஎல் நிர்வாகம் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒரு குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் ஐபிஎல்லில் உள்ள அனைத்து வீரர்களின் உயரத்தை இடுப்பு வரை அளவிடும் டேப்பைக் கொண்டு அளவிடுகிறார்கள். இந்தத் தரவு பின்னர் ஹாக்-ஐ ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் கணினியில் செலுத்தப்பட்டு ஸ்டோர் செய்யப்படும். அந்த தரவுகளை பயன்படுத்தி SRS மூலம் களநடுவர்கள் 3வது நடுவருடன் கலந்தாலோசித்து இடுப்பு-உயர ஃபுல் டாஸ்களின் உயரத்தை தீர்மானித்து முடிவுகளை எளிதாக வழங்குவார்கள். இது நடப்பு ஐபிஎல் தொடரிலெயே பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும்” டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.