ஐசிசி நடத்தும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அக்டோபர் 3 முதல் 20 வரை விளையாட திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வில், 10 அணிகள் பங்கேற்று 23 போட்டிகளில் 18 நாட்கள் விளையாடவிருக்கின்றன. போட்டிகளானது வங்கதேசத்தின் தலைநகரான டாக்கவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் மற்றும் சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்தப்படவிருந்தது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டு பிரச்னையால் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தின் காரணமாக வங்கதேசத்தில் நிறைய உள்நாட்டு பிரச்னைகள் ஏற்பட்டதால் டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடத்தவேண்டுமா என்ற ஆலோசனையில் ஐசிசி இருப்பதாக தகவல் வெளியானது. ஒருவேளை வங்கதேசத்தில் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை நடத்தப்படவில்லை என்றால் இந்தியா அல்லது யுஏஇ-ல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் வங்கதேசத்தில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தும் முடிவில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது.
பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்பதற்காக வங்கதேச ராணுவத்திடம் பாதுகாப்பு உறுதியை மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது.
கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, “நாங்கள் போட்டியை நடத்த முயற்சிக்கிறோம். உண்மையை சொல்லவேண்டுமானால், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்த பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து இராணுவத் தளபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம், ஏனெனில் எங்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன” என்று BCB-ன் நடுவர் குழுத் தலைவர் இப்தேகர் அகமது மிது கூறியுள்ளார்.
மேலும், “ஐசிசி இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் தொடர்பு கொண்டது, நாங்கள் விரைவில் அவர்களிடம் வருவோம் என்று பதிலளித்தோம். இன்று இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு வாரியம் அல்லது நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனத்தைத் தவிர வேறு யாராலும் பாதுகாப்பு உறுதியை எங்களுக்கு வழங்க முடியாது. எனவே நாங்கள் இன்று ராணுவத்திற்கு கடிதம் அனுப்பினோம். அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு நாங்கள் ஐசிசிக்கு அறிவிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.