2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி என 5 உலகக்கோப்பைகளை கோட்டைவிட்டிருக்கும் இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற லட்சியத்துடன் களம்கண்டுள்ளது.
நாக்அவுட் சுற்றுவரை முன்னேறும் இந்திய அணி, முக்கியமான போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் பற்றாக்குறையால் தோற்று தோல்விமுகமாக வெளியேறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் அத்தகைய நிலைமை ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என, அணிக்குள் “ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவிந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல்” முதலிய 4 ஆல்ரவுண்டர்களுடன் சென்றுள்ளது.
ஆல்ரவுண்டர்களின் இருப்பை உறுதிசெய்ய “தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி, நம்பர் 3 வீரராக ரிஷப் பண்ட், ஸ்பின் ஜோடிகளாக ஜடேஜா-அக்சர்” என மூன்று முக்கியமான நகர்த்தல்களை செய்துள்ளது. இதன்காரணமாக தொடக்க வீரருக்கான ஸ்லாட்டில் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியில் வைக்கப்படுவதால், நம்பர் 3 இடத்தில் நிரந்தரமாக யார் வரப்போகிறார்கள் என்ற கேள்வி அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது. எப்போதும் 3வது வீரராக விராட் கோலி வருவார் அல்லது சூர்யகுமார் யாதவ் வருவார், தற்போது பேட்டிங் ஆர்டர் முழுமையாக மாறியுள்ளது, யார் தான் நம்பர் 3 இடத்தில் வரப்போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நம்பர் 3 வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்து அனைத்து குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் பேசுகையில், “ரிஷப் பண்ட் தான் எங்களுடைய நம்பர் 3 வீரர், அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களில், நம்பர் 3 இடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே இந்த நேரத்தில் பண்ட் தான் எங்களின் நம்பர் 3 வீரராக் இருக்கப்போகிறார், மேலும் அவர் இடது கை வீரராக இருப்பதற்கு கூடுதலாக உதவுகிறது" என்று ரத்தோர் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்திய அணி டாப் 2 இடத்தில் விராட் கோலி - ரோகித் சர்மா, 3வது இடத்தில் பண்ட், 4வது இடத்தில் சூர்யகுமார், 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா, 7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா என்ற பேட்டிங் நிலையை ஃபிக்ஸ் செய்திருப்பது, செய்யவேண்டிய வேலையை சரியாக செய்யும் விதத்தில் சென்றுகொண்டிருப்பதை எடுத்து காட்டுகிறது.