டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி பிரீமியர் லீக் போட்டியில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர்களான ஆயுஸ் பதோனி மற்றும் இளம் பேட்டர் பிரயன்ஷ் ஆர்யா இருவரும் இணைந்து ஒரு விக்கெட்டுக்கு 286 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனையை எழுதியுள்ளனர்.
19 சிக்சர்களை விளாசிய ஆயுஸ் பதோனி 300 ஸ்டிரைக்ரேட்டில் 55 பந்துகளில் 165 ரன்களையும், 10 சிக்சர்களை விளாசிய இளம்வீரர் பிரயன்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 240 ஸ்டிரைக்ரேட்டில் 120 ரன்களையும் குவித்து மிரட்டினர்.
டெல்லியில் நடைபெற்றுவரும் டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரானது ஆகஸ்டு 16 முதல் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதிவரை நடக்கிறது. இதில் நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் சர்தக் ராய் அணி 2.2 ஓவரில் 13 ரன்கள் இருந்தபோது 11 ரன்னில் வெளியேறினார். ஒருவேளை டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணி சர்தக் ராயை அவுட்டாக்காமல் இருந்திருந்தால் கூட அந்தளவு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள். சர்தாக்கை தொடர்ந்து 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஆயுஸ் பதோனி ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
திரும்பிய பக்கமெல்லாம் சிக்சர் மழைகளாக பொழிந்த ஆயுஸ்பதோனி, 19 சிக்சர்களை கிரவுண்டின் நாலாபுறமும் சிதறடித்து 55 பந்துகளில் 165 ரன்களை குவித்து மிரட்டினார். மறுபுறம் ‘ஆயுஸ் பதோனிக்கும் எனக்கும் தான் போட்டியே’ என காட்டடி அடித்த 23வயது இளம்வீரர் பிரயன்ஷ் ஆர்யா இன்னிங்ஸின் 12வது ஓவரில் 6 பந்துகளிலும் 6 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்சர் மழையை பொழியவைத்தார். யுவராஜ் சிங், ரவிசாஸ்திரி, ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பிறகு ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் நான்காவது இந்தியவீரராக மாறி சாதனை படைத்தார்.
55 பந்துகளில் 19 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் பதோனி 165 ரன்களும், 50 பந்துகளில் 10 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் ஆர்யா 120 ரன்களும் குவித்து மிரட்ட இந்த ஜோடி டி20 கிரிக்கெட்டில் 308 ரன்களை குவித்து உலகசாதனைகளில் தடம்பதித்தது.
தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியை தொடர்ந்து 309 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
* 286 ரன்கள் பார்ட்னர்ஷிப் - ஆயுஷ் பதோனி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்தது. இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக உலகசாதனையை படைத்தது.
இதற்கு முன்பு ஜப்பானின் தொடக்க ஆட்டக்காரர்களான லச்லன் யமமோட்டோ-லேக் மற்றும் கெண்டல் கடோவாக்கி-ஃப்ளெமிங் ஆகியோரால் அடிக்கப்பட்ட 258 ரன்களே டி20 கிரிக்கெட்டில் எந்த விக்கெட்டுக்கும் அதிகப்பட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
* 19 சிக்சர்கள் - டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற உலகசாதனையை ஆயுஷ் பதோனி படைத்தார். 18 சிக்ஸர்கள் அடித்த எஸ்டோனியாவின் சாஹில் சவுகானின் சாதனையை அவர் முறியடித்தார்.
* 31 சிக்சர்கள் - தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் டி20 இன்னிங்ஸில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸர்களை பதிவுசெய்தது.
* 308 ரன்கள் -- தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. முதலிடத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் அடித்த 314/3 ரன்கள் இருக்கிறது.
* 165 ரன்கள் - பதோனி 55 பந்துகளில் 300 ஸ்டிரைக் ரேட்டில் 165 ரன்கள் எடுத்தார். இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக பதிவுசெய்யப்பட்டது. முதலிரண்டு இடங்களில் கிறிஸ் கெய்ல் (175 நாட் அவுட்) மற்றும் ஆரோன் ஃபின்ச் (172) இருவரும் நீடிக்கின்றனர்.