19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நேபாளம், மங்கோலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்களை குவித்தது. கடினமான இலக்கை சேஸ் செய்த மங்கோலியா அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் மாபெரும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்கள் 19, 16 ரன்களில் ஆட்டமிழந்துவிட்ட போதும் இந்த போட்டியில் நேபாள அணி வீரர்கள் குஷல் மல்லா, 50 பந்துகளில் 137 ரன்களை குவித்தார். அதேபோல் நான்கு புறமும் பந்துகளை பறக்கவிட்ட தீபேந்திர சிங், 10 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் பதிவு செய்து சாதனை படைத்தார். 19 ஆவது ஓவரின் கடைசி 5 பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸர் பறக்கவிட்ட அவர், 20 ஆவது ஓவரின் 2,4,6 ஆவது பந்துகளிலும் சிக்ஸர் விளாசினார்.
மொத்தமாக 8 சிக்ஸர்கள் விளாசிய அவர், 9 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் 2007-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார். அப்போது, இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் பிராட் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியிருந்தார் யுவராஜ்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக குவித்த 278 ரன்களே ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், 26 சிக்ஸர்களுடன் 314 ரன்களை எடுத்துள்ள நேபாளம் அந்த சாதனையையும் முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய குஷல் மல்லா, 34 பந்துகளில் சதமடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். 12 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை விளாசியுள்ள அவர், 35 பந்துகளில் சதமடித்து சாதனை செய்திருந்த ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.