இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 11 வருடங்கள் ஆகியிருந்தது. ஒரு டி20 உலகக்கோப்பை வென்று 17 வருடங்கள் ஆகியிருந்தது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை கைக்கு மிக அருகிலிருந்தும் இந்திய அணியால் வெல்லமுடியாமல் தோல்வி முகத்துடன் திரும்பியது. அதன்பிறகும் நம்பிக்கை குறையாமல் இருந்த ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணியை 2013-ம் ஆண்டிற்கு பிறகு 2024-ல் கோப்பைக்கு அழைத்துச்சென்றனர்.
கோப்பையை வென்றபிறகு இந்திய அணிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பானது, ரசிகர்களும் 2023 உலகக்கோப்பை தோல்வியால் எந்தளவு தாக்கத்திற்கு ஆளாகியிருந்தனர் என்பதும், அதற்கான மீட்சியாகவே டி20 உலகக்கோப்பையை பார்த்தார்கள் என்பதும் கொண்டாட்டங்களில் வெளிப்பட்டது.
இந்நிலையில் 2007 உலகக்கோப்பையில் தோல்வி கேப்டன் என தூக்கியெறியப்பட்ட ராகுல் டிராவிட், 2024 டி20 உலகக்கோப்பையை வென்றபிறகு எந்தளவு மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
2007 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை கேப்டனாக ராகுல் டிராவிட் வழிநடத்தினார். தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தபோதும் இந்திய அணிக்கு எதுவும் சரியாக செல்லவில்லை, மாறாக லீக் சுற்றோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதற்குபிறகு இந்திய அணியை ராகுல் டிராவிட் கேப்டனாக வழிநடத்தவில்லை. அப்போது தோல்வி கேப்டனாக சென்றவர், தற்போது பயிற்சியாளராக கோப்பை வென்று தன் பயணத்தை கோப்பையுடன் முடித்துக்கொண்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை வென்றபிறகு ராகுல் டிராவிட் எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என கூறியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஒரு அருமையான நபரைப் பற்றி பேச விரும்புகிறேன். 2007 உலகக்கோப்பையின் போது இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் அதற்குபிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கவில்லை.
ஆனாலும் இந்திய அணிக்கு ஒரு வீரராக செயல்பட்டார். ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால், இந்திய அணி தோல்வியடைந்தால், உடனடியாக ராகுல் டிராவிட் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டார்கள் அப்போதெல்லாம்...
அப்படிப்பட்ட ராகுல் டிராவிட்டை, விராட் கோலி அழைத்து கோப்பையை கொடுத்த தருணம்தான் என்னை பொறுத்தவரை சிறந்த தருணம். அப்போது ராகுல் டிராவிட் கோப்பையை கட்டிப்பிடித்து அழுவதை நான் பார்த்தேன். ராகுல் டிராவிட் வேகமாக கத்தி அழுதார். அவர் அந்த தருணத்தை மிகவும் ரசித்தார். அவரின் மனநிலையை என்னால் உணரமுடிந்தது" என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
டிராவிட்டின் உன்னதமான திட்டமிடல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராட்டிய அஸ்வின், "கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் இந்திய அணியுடன் என்ன செய்துவந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு சமநிலையுடன் இருந்தார், இந்த அணுகுமுறையை கொண்டுவர அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு வீரர்களுக்கும் ராகுல் டிராவிட் என்ன கொடுத்தார் என்பதும் எனக்குத் தெரியும், அவர் வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது கூட இந்திய அணிக்காக என்ன செய்யலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்தார்” என அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.