நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் அனைத்து அணிகளின் தொடக்க வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கலக்கிவரும் நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக இருக்கும் விராட் கோலி மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
1, 4, 0, 24 ரன்கள் என சொற்ப ரன்களை மட்டுமே எடுத்த விராட் கோலி, இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கிடைத்தும் தன்னுடைய விக்கெட்டை தானாகவே கிஃப்ட் செய்து வெளியேறினார். 1 பவுண்டரி 3 சிக்சர்கள் என அதிரடியாக விளையாடிய விராட் கோலி, ஆக்ரோசமாக விளையாட சென்று தன்னுடைய கூர்மையான ஆட்டத்தை இழந்துவருகிறார்.
விராட் கோலியின் இந்த அணுகுமுறை தான் அவரை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் தடுப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
விராட் கோலியால் ஏன் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்ற காரணத்தை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா, அவரால் நியூயார்க் ஆடுகளங்களில் நிலைத்து நின்று விளையாடி அரைசதங்களை அடித்திருக்க முடியும், ஆனால் அவர் தன்னை ஆக்ரோசமான பேட்டிங்கிற்கு மட்டுமே தயார்படுத்தி வந்தார் என்று கூறியுள்ளார்.
விராட் கோலி குறித்து பேசியிருக்கும் அவர், “விராட் கோலியால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியாமல் போனதற்கு காரணம் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் தான். அந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது அவருக்கு கடினமாக இருந்தது, ஆனாலும் அவர் ஆக்ரோசமாக விளையாடவேண்டும் என்ற ஒரு வழியில் மட்டுமே தன்னை பயணித்துக்கொண்டார்.
அவர் அணிக்காக அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தவர முயல்கிறார். இல்லையேல் அவரால் நியூயார்க் ஆடுகளத்தில் கூட நிலைத்து நின்று ரன்களை எடுத்திருக்க முடியும், ஆனால் கோலி தன்மீதே சவால்களை பிரயோகித்து வருகிறார்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பிரயன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான் நிலைக்கு நீங்கள் வந்தவுடன், உங்கள் திறனுக்கு சவாலளிக்க கூடிய இலக்குகளை நீங்கள் நிர்ணயித்துக் கொள்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில், உங்களின் இயற்கையான ஆட்டமுறைக்கு மாறாக நீங்கள் விளையாட முயற்சிக்கும் போது, அது உங்களுக்கு கைக்கொடுக்காமல் போக கூட வாய்ப்புண்டு. நீங்கள் ஆக்ரோசமாகவும் அதேநேரம் நிதானமாகவும் விளையாட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
விராட் கோலி இதற்கு முன்னரும் இதேபோல் அதிரடியாக விளையாடி பந்தை அடிப்பதில் தடுமாறினார், பின்னர் “என் ஆட்டம் பந்தை டைம் செய்வது தான், அடித்து ஆடுவது என் ஆட்டமுறையல்ல, அதை நான் உணர்ந்தபோது ரன்களை என்னால் எடுக்க முடிந்தது” என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். தற்போது விராட் கோலி 2024ஐபிஎல்லுக்கு பிறகு சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்றாலும், ஆக்ரோசத்துடன் அதேநேரம் நிலைத்து நின்று பெரிய ஸ்கோரை அடிக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.
வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். விராட் கோலி 37, ரிஷப் பண்ட் 36, ஷிபம் துபே 34, ரோகித் ஷர்மா 23 ரன்கள் எடுத்தனர்.