மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று வெற்றிக்கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 2024 ஐபிஎல் தொடரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டிய மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரோகித் சர்மா 5 மும்பை கோப்பைகளிலும், ஹர்திக் பாண்டியா 4 மும்பை கோப்பைகளிலும் முக்கிய பங்கு வகித்திருந்தாலும், நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் சேர்ந்து ஒன்றாக செயல்பட தவறவிட்டனர்.
ரசிகர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக தான் ரோகித் சர்மா மும்பை அணியில் ஒருவீரராக விளையாடினார், மற்றபடி அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் வேறு அணிக்கு சென்றுவிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் எந்த வீரர்களை மும்பை அணி தக்கவைக்கும் என்று தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டில் மும்பை அணியும் ரோகித் சர்மாவும் நிச்சயம் பிரிவார்கள், அவர் மீண்டும் அவர்களுக்காக விளையாட வருவார் என்று நான் நினைக்கவில்லை. நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம், ஆனால் இது நடக்கும் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ரோகித் சர்மா உடன் இணைந்து இஷான் கிஷனையும் மும்பை அணி வெளியேற்றும். அவருக்கான 15.5 கோடி ரூபாய் அதிக பணம் என்பதால் அவரை அணியிலிருந்து வெளியேற்றி, பின்னர் ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி குறைந்த தொகையில் திரும்பப் பெற முடியும். ஆனால் இஷான் தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.