2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் அவர்களுடைய உலகக்கோப்பை அணியை அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணி அவர்களுடைய 15 வீரர்கள் கொண்ட அணியுடன் 4 ரிசர்வ் வீரர்களின் பெயரையும் அறிவித்துள்ளது. அதன் படி, “ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்” முதலிய 15 வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் வீரர்கள் தேர்வு குறித்தும், சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் பதிலளித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருப்பதாகவும், அதனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி வைரலானது. அதேநேரத்தில் ஹர்திக் இடம்பெற்றாலும் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான விரிசல் பெரிதாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றது மட்டுமில்லாமல், துணை கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அஜித் அகர்கரிடம் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன் பதவிகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “துணை கேப்டன் பதவி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவருகிறார் என்பது அவருடைய உடற்தகுதி நன்றாக இருப்பதை குறிக்கிறது. அவர் உடற்தகுதியுடன் இருக்கும் வரை, அவரால் என்ன செய்ய முடியும் என்பதற்கு மாற்று வீரர் அணியில் யாரும் இல்லை” என்று தெரிவித்தார்.
ஹர்திக்கின் பவுலிங் கூடுதல் பலமாக இருக்கும் என்று கூறிய அவர், “பாண்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுமையாக தயாராகி கம்பேக் கொடுத்துள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.. குறிப்பாக அவரின் பந்துவீச்சு கேப்டனாக ரோகித்துக்கு அணியில் சமநிலையையும், பல்வேறு விருப்பங்களையும் எடுத்துவரும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று அகர்கர் கூறினார்.