பரபரப்பாக நடந்துவரும் 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ”ரிஷப் பண்ட், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல்” போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் கூட இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரிங்கு சிங், கேஎல் ராகுல், நடராஜன் முதலிய வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வி பல முன்னாள் வீரர்களால் அதிகமாக எழுப்ப்பட்ட நிலையில், அதற்கான விளக்கத்தை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் வீரர்கள் தேர்வு குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.
அப்போது ரிங்கு சிங் ஏன் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர், “அது எங்களுக்கே மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. உண்மையில் ரிங்கு சிங் எந்ததவறும் செய்யவில்லை. அவர் எங்களின் ரிசர்வ் வீரராக இருக்கிறார், அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் ரிங்குசிங் தேர்வானது எவ்வளவு சிரமமானதாக இருந்திருக்கும் என்று. அதேதான் சுப்மன் கில் விசயத்திலும் நடந்தது, எங்களுக்கு கூடுதலாக பந்துவீச்சு இருப்பது தேவை என்று உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறியுள்ளார்.
கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய அகர்கர், “கேஎல் ராகுல் தொடர்ந்து ஐபிஎல்லில் தொடக்க வீரராக விளையாடுகிறார். ஆனால் எங்களுடைய விருப்பம் மிடில் ஆர்டரில் பொருந்தும் வீரர்களாக இருந்தது, அதனால் தான் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சஞ்சு சாம்சன் போன்ற வீரர் எந்த இடத்திலும் சிறப்பாக விளையாட கூடியவர் என்பது எங்களுக்கு கூடுதல் தேவையாக இருந்தது. எங்களுடைய தேர்வு யார் சிறந்தவர் என்பதை பற்றியல்ல, யார் அணிக்கு தேவையானவர் என்பதை பொறுத்தே இருந்தது” என்று விளக்கமளித்துள்ளார்.