‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..’ தோனி வைத்த நம்பிக்கை - WTC 2023 பைனலில் சேர்க்கப்பட்ட சிஎஸ்கே வீரர்

சென்னை அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஜிங்க்யா ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே
சிஎஸ்கேட்விட்டர்
Published on

ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் இந்திய தேசிய அணியில் சேர்க்கப்படுவது வழக்கம். தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலாக, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும், ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தால் கவனம் ஈர்க்கும் உள்நாட்டு வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிப்பது வழக்கமாகி வருகிறது. இதில், ஏற்கெனவே இந்திய தேசிய அணியில் இருந்து, பின்னர் ஃபார்ம் இழந்து ஐபிஎல் போட்டிகளில் ஜொலிக்கும் சீனியர் வீரர்களும் சேர்க்கப்படுவது விதி விலக்கல்ல.

சிஎஸ்கே
‘தோனி அணியில் இருப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது’ - புகழாரம் சூட்டிய கான்வே!

அந்தவகையில், வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னை அணி வீரர் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில், இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். மேலும், சுப்மன் கில், செட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் கொண்ட இந்திய அணி பங்குகொள்ள உள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் கடந்த 8-ம் தேதி சென்னை அணி சார்பில் முதன்முதலாக களமிறக்கப்பட்ட ரஹானே, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து சிஎஸ்கே வெற்றிபெற உதவினார். ஐபிஎல் தொடரில் கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ரஹானே, அந்த அணியில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இருந்தார்.

MS Dhoni
MS DhoniTwitter

அதனால், சென்னை அணி கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடப்புத் தொடரில் முதன்முதலாக வாய்ப்புக் கொடுத்தபோது, அதனைப் பயன்படுத்தி ரஹானே சாதித்துக் காட்டினார். தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 19 பந்துகளில் 31 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் 20 பந்துகளில் 37 ரன்களும், கேகேஆர் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்களும் எடுத்து அவர் அதிரடி காட்டினார்.

‘எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்தமாதிரி விளையாடுங்கள் என்று தோனி சுதந்திரம் கொடுத்தார். மட்டுமில்லாமல், அவர் சொல்வதை பின்பற்றினாலே போதும்; அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடலாம்’ என்று போட்டிக்கு பின்பான செய்தியாளர் சந்திப்பில் ரஹானே கூறியிருந்தார். 16.25 கோடி ரூபாய்க்கு மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடாத நிலையில், 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ரஹானேவை, தோனி நம்பி களமிறக்கியபோது, அவர் தனது பேட்டிங்கில் சரவெடியாய் வெடித்து வருகிறார்.

ரஹானே,
ரஹானே,ட்விட்டர்

மேலும், இந்திய அணியின் அனைத்து வடிவப் போட்டிகளிலும் கேப்டனாக இருந்துள்ள ரஹானே, மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். எனினும் தற்போது ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களாக பறக்கவிட்டு கிரிக்கெட் விமர்சகர்களையும் தாண்டி, பிசிசிஐ கவனத்தை ஈர்த்துள்ளார் என்பதற்கு சான்றாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிஎஸ்கே
‘தோனியைவிட சிறந்த கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது’ - சிஎஸ்கே முன்னாள் வீரர் பாராட்டு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இஷான் கிஷான் சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாகவும், ரிஷப் பந்த் விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வரும் காரணமாகவும் சேர்க்கப்படவில்லை. இதேபோல் நட்சத்திர பௌலர் பும்ராவும் அணியில் இடம்பெறவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com