AFGvBAN | வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்... ஆஸ்திரேலியா அவுட்..!

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இலக்கை 12.1 ஓவர்களில் சேஸ் செய்தால் அந்த அணி ஆஸ்திரேலியாவை விட நல்ல ரன்ரேட் பெறும். அதன்மூலம் அரையிறுதி வாய்ப்பைப் பெறும். அதனால் இது ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா vs வங்கதேசம் என மும்முணைப் போட்டியாக அமைந்தது.
rashid Khan
rashid KhanPTI
Published on

2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறி சரித்திரம் படைத்திருக்கிறது ஆப்கானிஸ்தான். மிகமுக்கியமான சூப்பர் 8 போட்டியில், அசத்தலாக விளையாடி வங்கதேசத்தை 8 ரன்கள் (DLS முறைப்படி) வித்தியாசத்தில் வீழ்த்தியது ரஷீத் கான் அண்ட் கோ. இதன்மூலம் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றை எட்டியிருக்கிறது அந்த அணி.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தொடக்கத்தில் இருந்தே பல ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் பரிசளித்துக்கொண்டிருக்கிறது. லீக் சுற்றில் பல எதிர்பாராத முடிவுகள் கிடைத்த நிலையில், சூப்பர் 8 சுற்றிலும் அப்படியொரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது ஆப்கானிஸ்தான். அதனால் அவர்களுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்தது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். அதேசமயம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு எதிராக தோற்கவேண்டும்.

இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எல்லாம் கைகூடி வந்தது. இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ருத்ரதாண்டவத்தால் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் அவர்கள் சூப்பர் 8 சுற்றை 2 புள்ளுகளோடு முடிக்க நேரிட்டது. இது ஆப்கானிஸ்தானின் வாய்ப்பை அதிகப்படுத்தியது. அந்த அணி வங்கதேசத்தை வீழ்த்தினாலே போதுமானதாக இருந்தது. இல்லையெனில், போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

rashid Khan
T20 World cup: ரோகித் சர்மா அதிரடி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடினமான ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினார்கள். அந்த பார்ட்னர்ஷிப்பை வங்கதேச லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன் பிரித்தார். 29 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இப்ராஹிம் ஜத்ரான். அதன்பிறகு வந்த எந்த பேட்ஸ்மேனுமே நிலைத்து நின்று ஆடவில்லை. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குர்பாஸும் 43 ரன்களில் 17வது ஓவரின்போது ஆட்டமிழந்தார். மிகவும் சுமாரான ஸ்கோரை நோக்கிப் பயணித்துக்கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி சில பௌண்டரிகள் அடித்தார் கேப்டன் ரஷீத் கான். 10 பந்துகள் சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் விளாசினார் அவர். அதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது அந்த அணி. வங்கதேச பௌலர்களில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தப் போட்டியை இன்னும் பரபரப்பாக்கிய இன்னொரு விஷயம், வங்கதேச அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு இருந்தது தான்! ஆஸ்திரேலியா தோற்றதால், அந்த அணிக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இலக்கை 12.1 ஓவர்களில் சேஸ் செய்தால் அந்த அணி ஆஸ்திரேலியாவை விட நல்ல ரன்ரேட் பெறும். அதன்மூலம் அரையிறுதி வாய்ப்பைப் பெறும். அதனால் இது ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா vs வங்கதேசம் என மும்முணைப் போட்டியாக அமைந்தது.

இத்தனை களேபரங்களுக்கு இடையே மழை வேறு அடிக்கடி குறுக்கிட்டுக்கொண்டே இருந்தது. ஆஸ்திரேலிய ரசிகர்களும், வங்கதேச ரசிகர்களும் ஒருசேர ஆட்டம் ஆரம்பிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தனர். ஒருவழியாக மழை நின்று வங்கதேச இன்னிங்ஸ் சீக்கிரம் தொடங்கியது. அரையிறுதி வாய்ப்பு இருந்ததால் அந்த அணி அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கியது. அதன் காரணமாக விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன. ஓப்பனர் லிட்டன் தாஸ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்தார். அடிக்கடி மழை குறுக்கிட்டுக்கொண்டே இருக்க, 20 ஓவர்களில் 116 என்ற இலக்கு, 19 ஓவர்களில் 114 என மாறியது. ஆடுகளும் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததால் ஒருகட்டத்துக்கு மேல் வங்கதேச பேட்ஸ்மேன்களால் அதிரடி காட்ட முடியவில்லை. அதனால் அவர்களால் 13வது ஓவரில் இலக்கை சேஸ் செய்ய முடியவில்லை. அதோடு அவர்களின் அரையிறுதி கனவு கரைந்து போனது.

குறைந்தபட்சம் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானின் கனவை முடக்க அந்த அணி எதிர்பார்த்திருக்கும். ஆனால், பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து நின்று ஆடாததால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலைக்குச் சென்றது. அதேசமயம் பௌலர்கள் சற்று ஆதரவு கொடுக்க, லிட்டன் தாஸ் ஸ்கோரை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்தார். அதனால் போட்டி மாறி மாறி சென்றுகொண்டே இருந்தது. ஆனால் 18வது ஓவரில் கடைசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார் நவீன் உல் ஹக். இதன்மூலம் சூப்பர் 8 முதல் குரூப்பில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பெற்றது அந்த அணி. அதோடு இந்த உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. ஒருகட்டத்தில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட அந்த அணி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறு சரித்திரம் படைத்திருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com