இந்திய கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த வீரர்களுக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் அப்படியிருந்த போதும் ஒரு சில வீரர்கள் அணியில் நிரந்தரமாக இடம்பிடித்து, காயமாகி வெளியேறினால் கூட மீண்டும் எப்போது அணிக்குள் வருகிறார்களோ அப்போது நேராக அணியில் நுழைந்துவிடுவார்கள்.
காலங்காலமாக பிசிசிஐ இதைத்தான் கடைப்பிடித்துவருகிறது. ஃபார்மில் இல்லையென்றால் கூட நிரந்தரமான வீரராக கருதப்படுகிறவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும். அதற்கேற்றார் போல் அவர்கள் உலகக்கோப்பை தொடருக்கு சென்று மோசமாக விளையாடி சொதப்புவார்கள். அப்போது சிறந்த ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் மறுக்கப்படுவார்கள்.
நடப்பு உலகக்கோப்பை அணியில் கூட சிறந்த ஃபார்மில் இருந்துவரும் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் சேர்க்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்திருந்த நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.
கடந்த லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, 19 பந்தில் அரைசதமடித்தது மட்டுமில்லாமல் 267 ஸ்டிரைக்ரேட்டுடன் 75 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நம்பவே முடியாத ஹிட்டிங் திறமையை வெளிப்படுத்திவரும் அபிஷேக் சர்மா 35 சிக்சர்களை பறக்கவிட்டு முதல் வீரராக இருந்துவருகிறார். ஆனால் அவருக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்த ஆகாஷ் சோப்ரா, “இந்த ஐபிஎல் நமக்கு ஒரு விஷயத்தை நன்றாகவே எடுத்துக்காட்டியுள்ளது, இந்திய கிரிக்கெட்டில் பவர் ஹிட்டர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் வாய்ப்பு வழங்கப்படாமல் Uncapped வீரர்களாகவே இருந்துவருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.