2007 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த பிறகு, அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அப்போது தான் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் 2008 முதல் 2011 வரை இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்திய வீரர்களை சிறப்பாக கையாண்ட கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியதில் பெரிய பங்காற்றினார். உலகக்கோப்பையை வென்ற பிறகு தென்னாப்பிரிக்கா ஜாம்பவானை இந்திய வீரர்கள் தோளில் சுமந்து வலம்வந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் பிறந்த கேரி கிர்ஸ்டன் தென்னாப்பிரிக்கா அணிக்காக 1993 முதல் 2004 வரை 11 வருடங்கள் விளையாடினார். அந்த வருடங்களில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 7289 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6798 ரன்களும், முதல்தர கிரிக்கெட்டில் 16670 ரன்களும் குவித்துள்ளார். அவரின் சில அசாத்திய சாதனைகளை பார்ப்போம்..
* 159 பந்துகளில் 188* ரன்கள்
* 13 பவுண்டரிகள்
* 4 சிக்ஸர்கள்
1996 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில், தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய கேரி கிறிஸ்டன் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 159 பந்துகளில் 188* ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார். அது அப்போது ஒருநாள்கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக தனிநபர் ஸ்கோராக பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தென்னாப்பிரிக்கா வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றுவரை கேரி கிர்ஸ்டன் பதிவுசெய்த 188* ரன்களே இருந்துவருகிறது.
🏏 275 ரன்கள்
⏱️ 878 நிமிடங்கள்
1999-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதிய டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 366 ரன்கள் குவித்தது. அதற்குபிறகு ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ஆண்டி கேடிக்கின் 7 விக்கெட்டுகள் ஸ்பெல்லால் 156 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது மட்டுமில்லாமல் ஃபாலோ-ஆன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
எப்படியும் எளிதில் வென்றுவிடலாம் என நினைத்த இங்கிலாந்து அணிக்கு களத்தில் 878 நிமிடங்கள் நிலைத்து நின்று பேட்டிங் ஆடிய கேரி கிர்ஸ்டன் சிம்மசொப்பனமாக விளங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது மிக நீண்ட டெஸ்ட் நாக்கை பதிவு செய்த கேரி கிர்ஸ்டன் 275 ரன்கள் குவித்து போட்டியை டிராவிற்கு அழைத்துச்சென்றார்.
2002-ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 150 ரன்களை எடுத்ததன் மூலம், கேரி கிர்ஸ்டன் அந்த நேரத்தில் அனைத்து 9 டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேனாக தன்னை உலக கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார்.
2004-ம் ஆண்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தென்னாப்பிரிக்க வீரராக கேரி கிர்ஸ்டன் மாறினார்.
101 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 7289 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவிற்காக அதிக ரன்கள் அடித்த 5 வீரர்களில் ஒருவராக இருந்துவருகிறார்.
தன்னுடைய அசாத்தியமான கிரிக்கெட் பயணத்திற்குபிறகு 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்ட்ன், இந்திய அணியின் 28 ஆண்டுகால கோப்பைக்கனவை நிறைவேற்றிய பயிற்சியாளராக மாறினார்.
அதற்குபிறகு தென்னாப்பிரிக்காவிற்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட அவர், 2022 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், அணியின் ஆலோசகராகவும் விளங்கினார்.
அவரின் கீழ் குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 ஐபிஎல் கோப்பை வென்றது மட்டுமில்லாமல், அடுத்த ஐபிஎல்லிலும் இறுதிப்போட்டிவரை முன்னேறியது. தற்போது கடந்த மே மாதத்தில் இருந்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் கேரி கிர்ஸ்டன்.