2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது மிகப்பெரிய மெகா ஏலத்தை சந்திக்க இன்னும் 14 நாட்களே மீதமிருக்கின்றன. மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஜெட்டாவில் நடைபெற உள்ளது.
உலகத்தின் நம்பர் 1 டி20 லீக்கான ஐபிஎல் தொடரின் ஏலத்தில் உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் பலர் வெளிவருவார்கள் என்று பத்து உரிமையாளர்களும் காத்திருக்கின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேடப்படும் வீரர்களில் ஒருவராக நிச்சயம் இருப்பார்.
2024 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய பிறகு, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை 34 வயதான ஸ்டார்க் முறியடித்தார். இருப்பினும், ஐபிஎல் 2025 க்கு முன்னதாக அவர் தக்கவைக்கப்படாத நிலையில்,மீண்டும் ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பெறவிருக்கிறார்.
2024 ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பட்டத்தை வென்றதில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டார்க் மிகப்பெரிய பங்களிப்பை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் நவம்பர் 24-ம் தேதி மிட்செல் ஸ்டார்க்கை குறிவைக்கும் ஐந்து ஐபிஎல் அணிகள் யார் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்..
பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகப்படியான ஏலத் தொகையை (ரூ.110 கோடி) கொண்டிருப்பதால் மட்டுமில்லாமல், புதிய தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருப்பதால் நிச்சயம் அவர்களின் பெரிய பைட்டாக மிட்செல் ஸ்டார்க் இருக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் என்ற இரண்டு பெரிய பெயர்களை அவர்கள் தங்களுடைய டார்கெட்டாக வைத்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய லெகசியை வைத்திருக்கும் அணியாக இருந்தாலும், இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பை கூட வென்றதில்லை என்பதால் இந்தமுறை கோப்பையை நோக்கிய அணியை கட்டமைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்தவகையில் தங்களுடைய பழைய அணி வீரரான மிட்செல் ஸ்டார்க்கை மீண்டும் அணிக்குள் கொண்டுவர தீவிரமாக இருப்பார்கள். அவர்களிடம் 83 கோடி மீதம் உள்ளது.
2022 ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அவர்கள் தக்கவைத்த 5 வீரர்கள் பட்டியலில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூட இல்லாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர்களின் சிறந்த வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா மற்றும் தர்ஷன் நல்கண்டே போன்றோர் புறக்கணிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஐந்து தக்கவைப்புகளுடன் டைட்டன்ஸ் அணி 69 கோடி ரூபாய் தொகையுடன் செல்லும் நிலையில், அவர்கள் வெளியேற்றிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மாற்றாக மிட்செல் ஸ்டார்க் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களுடைய முதல் ஐபிஎல் பட்டத்தை எதிர்பார்க்கும் நிலையில், மிட்செல் ஸ்டார்க்கை தங்கள் ரேடாரில் வைத்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏலத்திற்கு முன்னதாக கேப்பிடல்ஸ் அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை தக்க வைத்துக் கொண்ட நிலையில், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் தேடுதலாக இருப்பார்கள்.
ஏலத்திற்கு முன்னதாக, கேபிட்டல்ஸ் 73 கோடி ரூபாயை மீதம் வைத்துள்ள நிலையில், ஸ்டார்க் அவர்களின் வேகப்பந்துவீச்சு யூனிட்டை வழிநடத்தும் ஒரு வீரராக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
லக்னோ அணி நட்சத்திர டி20 பேட்ஸ்மேனை கேப்டனாக கொண்டுள்ளது. அவர்களுக்கான அணியில் நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொசின் கான் மற்றும் ஆயுஷ் பதோனி முதலிய பெயர்களை தக்கவைத்துக் கொண்டது.
ஒப்பீட்டளவில் அனுபவமற்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதால், மிட்செல் ஸ்டார்க்கின் சாத்தியமான சேர்த்தல் LSG அவர்களின் ஆயுதக் களஞ்சியத்தில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை வளர்க்க உதவும். 69 கோடி ரூபாய் ஏலத்தொகையுடன் செல்லும் லக்னோ அணி ஸ்டார்க்கை குறிவைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.