இந்திய கிரிக்கெட் சகாப்தத்தில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் “மகேந்திர சிங் தோனி” என்ற பெயர் தான் அனைவரது வாயிலும் முதல்பெயராக உச்சரிக்கப்படும். இந்திய கிரிக்கெட் என்பதை தாண்டி “ 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை” என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே உலக கேப்டனாகவும் உலக கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி தனது முத்திரையை பதித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டை தாண்டி ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றிருக்கும் எம்எஸ் தோனி. அதிக வயதில் (41 வயது 326 நாட்கள்) ஐபிஎல் கோப்பை வென்ற ஒரேயொரு கேப்டனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 42 வயதில் ஐபிஎல் போன்ற உலகின் நம்பர் 1 டி20 லீக்கில் கோப்பை வெல்லவேண்டுமானால், அது தோனியுடைய சிறந்த கேப்டன்சியை தான் நிலைநிறுத்துகிறது.
அணித்தேர்வு, போட்டியின் போது எடுக்கப்படும் முடிவுகள், பவுலர் ரொட்டேசன், ஸ்டம்புக்கு பின்னால் சிறந்த விக்கெட் கீப்பர், அழுத்தம் நிறைந்த தருணத்தில் சரியான முடிவுகள் என பல்வேறு காரணங்கள் எம்எஸ் தோனியை ஒரு சிறந்த கேப்டனாக மாற்றுகிறது. அதில் சிறந்த ஐந்து விசயங்களை தேர்வுசெய்வது என்பது கடினமானது, இருப்பினும் தோனியின் கேப்டன்சியில் சிறந்தவற்றில் முதல் 5 காரணங்கள் மட்டும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
சிறந்த அணித் தேர்வு செய்வதில் தோனியை விட சிறந்த கேப்டனை கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. அந்தளவு எதிரணியின் பலம், ஆடுகளம் மற்றும் நிலைமைகளைப் பொறுத்து எம்எஸ் தோனி தனது அணிகளை இதுவரை தேர்ந்தெடுத்துள்ளார். அதுவே அவரது கேப்டன்சியின் வெற்றிக்கு முதன்மை பலமாக அமைந்துள்ளது. அவரின் அணித்தேர்வு முடிவுகள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் எப்போதும் சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளன.
அதற்கு எடுத்துக்காட்டாக ஐபிஎல் தொடரில் அவர் தேர்ந்தெடுத்த அணிகளை எடுத்துக்கொள்ளலாம். ”முதலில் அப்பாக்கள் அணி” என்று கிண்டல் செய்யப்பட்டாலும், பின்னர் தோனியின் முடிவு சரிதான் என எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனால் தான் அவரால் 40 மற்றும் 42 வயதில் கூட இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வெல்லமுடிந்தது. இதுவரை அதிகளவில் ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டனாக, முதலிரண்டு இடத்தில் தோனியே நீடிக்கிறார்.
அதேபோல 2023 ஐபிஎல் சீசனில், அவரது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அஜிங்க்யா ரஹானே மற்றும் பதிரானாவை அணிக்குள் கொண்டு வந்தது அமைந்தது. அவர்கள் இருவரும் சிஎஸ்கே அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்செல்வதில் பெரிய பங்காற்றினர். அவர்களை தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே மற்றும் ஆகாஷ் சிங் போன்ற உள்நாட்டு வீரர்களுடன் சென்ற தோனியின் முடிவானது மிகவும் நம்பகமானதாக அமைந்தது.
’ஷிவம் துபேவலாம் எதுக்குங்க சிஎஸ்கே டீம்ல எடுத்திங்க’ என்ற எழுந்த குரல்கள் எல்லாம், தற்போது ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கு எடுத்துச்செல்லுங்கள் என்ற குரலாக மாறியுள்ளது என்றால் அது தோனியின் கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றியாகவே அமைந்துள்ளது.
2023 ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அதிகப்படியான சந்தோசத்தில் இருந்த எம்எஸ் தோனி, பல்வேறு இண்டர்வியூக்களில் பங்கேற்றார். அந்த இண்டர்வியூக்களில் எல்லாம் தோனி பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. அப்படி இணையத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், எம்எஸ் தோனியிடம் கேள்விகேட்ட ஆர்சிபி ரசிகர் ஒருவர் “நீங்க ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையை வென்று தரவேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த எம்எஸ் தோனி “அனைத்து அணியும் கோப்பை வெல்ல வேண்டும், ஆனால் எனது அணியிலிருந்து விலகிவந்து வேறு அணிக்கு கோப்பை வென்று கொடுத்தால் என்னுடைய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள். எல்லாவற்றையும் தாண்டி எங்களுடைய அணியிலேயே சரிசெய்ய வேண்டிய வேலைகள் அதிகமிருக்கின்றன” என்று பதிலளித்திருந்தார்.
உண்மையில் சென்னையில் சரிசெய்ய வேண்டிய வேலைகள் தோனிக்கு நிறையவே இருந்துள்ளன, இருந்தும் வருகின்றன. கடந்த 2023 ஐபிஎல் தொடரிலேயே ஜடேஜாவிடம் சென்ற கேப்டன்சி விவகாரம், அணியை இரண்டாக உடைக்கும் நிலைக்கே சென்றது. ஒருவழியாக ஜடேஜாவை சமாதானம் செய்து தோனி அந்த பிரச்னையை முடித்துவைத்தார். 2022ம் ஆண்டு மிகமோசமான ஒரு பெஞ்சை வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இப்போது அதை சரிசெய்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த தலைமுறைக்கான அணியை கட்டமைப்பதில் எம்எஸ் தோனி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
டி20-ஐ பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர்கள் தேவையானது முக்கியமானது, அதனை சிஎஸ்கே பூர்த்தி செய்துவிட்டது என்றே சொல்லவேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஸ்பாண்டே என அடுத்த தலைமுறை வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு அமைந்துவிட்டனர். அடுத்த மெகா ஆக்சனுக்கு செல்லும் போது மீதமிருக்கும் ஆழத்தை எம்எஸ் தோனி நிச்சயம் சரிசெய்துவிட்டு வெளியேறுவார். அணியை அடுத்த இடத்திற்கு நகர்த்தி செல்வதில் தோனியின் நேர்மைத்தன்மை அவருடைய கேப்டன்சிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
ஒரு சிறந்த கேப்டனுக்கான தகுதி என்னவென்றால் உங்களால் ஆட்டம் மோசமாக செல்லும் போதும், கைவிட்டு செல்லும் போதும் மிகச்சரியான முடிவுகளை எடுத்து ஆட்டத்தை இழுத்து பிடிக்கவேண்டும். அப்படியான பல முடிவுகளில் தோனி ஒரு நகம் கடிக்கக்கூடிய க்ளோஸ் என்கவுண்டர் போட்டிகளில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக சர்வதேச போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிரான 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி, இலங்கைக்கு எதிரான ஒரு விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிகள் என பல ஆட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஐபிஎல் தொடரில் அதற்கு எடுத்துக்காட்டாக பல போட்டிகள் உதாரணமாக அமைந்துள்ளன. களத்தில் தோனி செய்யும் ஃபீல்டிங் மாற்றங்கள், பவுலிங் ரோட்டேசன் என பல தருணங்கள் போட்டியை மாற்றியுள்ளன. அந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகும். தோனி மற்றும் ரோகித் சர்மாவை பொறுத்தவரை இருவரும் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, சரியான முடிவுகளை பரீசிலித்து பார்ப்பதில் வல்லவர்கள். தோனி களத்தில் எடுக்கும் சரியான முடிவுகள் அவரை சிறந்த கேப்டனாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
பெரும்பாலான ஐபிஎல் அணிகள் பல்வேறு அணி சேர்க்கைகளை அடிக்கடி பரிசோதித்து பார்ப்பதையும், சில மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு வீரர்கள் கைவிடுவதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் சென்னை அணியை பொறுத்தவரையில் வீரர்கள் தேர்வானது, எப்போதும் பெரிய மாற்றங்கள் இல்லாமலே ஒவ்வொரு போட்டிக்கும் இருக்கும். வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அவர்கள் திறமை மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பார்.
அதற்கு பிறகு அந்த வீரர் அந்த நம்பிக்கைக்காகவே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, அணிக்கு தேவையான நேரத்தில் கம்பேக் கொடுப்பார். இந்த விசயத்தில் சிஎஸ்கே அணியில் அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ஷிபம் துபே முதலிய வீரர்களை சமீபத்தில் சிஎஸ்கே அணியில் பார்த்திருக்கிறோம். இந்திய அணியை பொறுத்தவரையில் விரேந்திர சேவாக்கை நிறுத்திவிட்டு, ரோகித் சர்மாவிற்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தபோது தோனியின் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது ரோகித் சர்மா சொதப்பினாலும், அவருக்கு தொடந்து வாய்ப்பளித்த எம்எஸ் தோனி, தற்போது ஒரு சிறந்த தொடக்கவீரரை இந்திய அணிக்கு பரிசளித்ததில் பெரியபங்கை வகித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங்கிற்கும், ஸ்டம்ப் மைக்கிற்கும் இடையேயான காதல் என்பது ஒரு வெற்றி காதலாக இருந்துள்ளது. விக்கெட் கீப்பராக அவர் எடுக்கும் முடிவுகள், ஃபீல்ட் செட்டிங், டிஆர்எஸ் முடிவுகள், பந்துவீச்சாளர்களுடனான பேச்சு, பேட்ஸ்மேன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை புரிந்துகொண்டு இடமாற்றம் என ஒரு வெற்றிகரமான விக்கெட் கீப்பராக தோனி இருந்தது அவருடைய கேப்டன்சியின் வெற்றியில் பெரிய பங்காக இருந்துள்ளது.
தோனிக்கும் ஸ்டம்ப் மைக்கிற்கும் இடையேயான காதல், 2017-ம் ஆண்டு இந்தியா-நியூசிலாந்து ஒரு நாள் தொடர் சுற்றுப்பயணத்தில் வெளியில் அதிகப்படியாக பேசப்பட்டது. ஸ்பின்னர்களுக்கு ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து அவர் கொடுக்கும் பெரும்பாலான அறிவுரைகள் படமாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகின. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியது மற்றும் இப்போது தோனியின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
MSD அடிக்கடி ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல் முதலிய ஸ்பின்னர்களுடன் ஹிந்தியில் கருத்து தெரிவித்து, பேட்ஸ்மேனின் அடுத்த மூவ் என்ன என்பதை தெரிவிப்பார். அதனை பின்பற்றி பவுலர்கள் பந்துவீசும் போது அங்கு விக்கெட் விழுகிறது. அதேபோல தோனி எடுக்கும் DRS ரிவ்யூக்கள் 100% சக்சஸ்ஃபுல்லாக இருப்பதால், DRS ஆனது Dhoni Review System என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த 5 காரணங்களை தாண்டியும் “புதிய விசயங்களை கற்றுக்கொண்டே இருப்பது, தன்னையும் புதியவற்றிற்காக மெருகேற்றிக்கொள்வது, தோல்வியையும் ஒரு சாம்பியனாக ஏற்றுக்கொள்வது” என எம்எஸ் தோனியின் கேப்டன்சியின் சக்சஸ் ஃபார்முலாவாக பல்வேறு விசயங்கள் இருக்கின்றன.