கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த டி20 பௌலர் அர்ஷ்தீப் தான். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உல்க அளவிலேயே டி20 ஃபார்மட்டில் மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் இவர். பவர்பிளே, டெத் என இரண்டு ஏரியாவிலுமே சிறப்பாக செயல்படுகிறார். அப்படியிருக்கும்போது ஏன் அவர் மீது கவனம் செலுத்தவேண்டும் - ஐபிஎல் ஏலம். இந்த ஸ்குவாடில் இருக்கும் முன்னணி வீரர்கள் பெரும்பாலும் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அர்ஷ்தீப்பை பஞ்சாப் ரிலீஸ் செய்துவிட்டது. முதல் வீரருக்கு 18 கோடி கொடுக்கவேண்டும் என்பதால், இவரை அதைவிடக் குறைவாக வாங்கிட முடியும் என்று நம்புவதால் அந்த அணி அப்படியொரு முடிவை எடுத்தது. அது சரியானது தான்.
அப்படியொரு நிலையில், அர்ஷ்தீப்பின் செயல்பாடு அவர் எத்தனை கோடி அதிகமாகப் பெறப்போகிறார் என்பதை முடிவு செய்யும். தரமான ஒரு வீரர் என்பதால் நிச்சயம் 10 கோடி வரை போவார். ஆனால், அதற்கு மேல் அவர் பெறப்போகும் ஒவ்வொரு கோடிக்கும் இத்தொடரில் அவர் ஒவ்வொரு விக்கெட் கூடுதலாக எடுக்க முயற்சிப்பார்.
ஜித்தேஷையும் பஞ்சாப் கிங்ஸ் ரிலீஸ் செய்துவிட்டது. அர்ஷ்தீப் போல் இவரையும் RTM மூலம் தக்கவைக்க முயற்சிப்பார்கள். ஆனால், மற்ற அணிகளின் பார்வையை ஜித்தேஷ் எந்த அளவுக்குத் திருப்புகிறார் என்பது முக்கியம். இந்திய விக்கெட் கீப்பர்களுக்குப் பொதுவாக ஏலத்தில் கிராக்கி இருக்கும். அதிலும் இவர் ஃபினிஷர் வேறு. இந்த விஷயங்கள் அவருக்கு சாதகமாக இருந்தாலும், சர்வதேச செயல்பாடு அவர் பக்கம் இல்லை. 9 டி20 போட்டிகளில் 100 ரன்களே அடித்திருக்கிறார். சராசரி 15க்கும் கீழ் தான். அதனால், இந்த 4 போட்டிகளில் எவ்வளவு வாய்ப்பு பெறுவார் என்பதும் தெரியவில்லை. அப்படி வாய்ப்பு பெறும்போது அவரால் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறதோ, அந்த அளவுக்கு அவரால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும். மும்பை இந்தியன்ஸ், சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கும் கீப்பருக்கான தேவை இருக்கும் நிலையில், அவர்கள் கவனத்தை ஜித்தேஷ் பெறவேண்டுமெனில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும்.
இவரும் ரீடெய்ன் செய்யப்படவில்லை. அதனால் தென்னாப்பிரிக்காவில் கொடுக்கும் செயல்பாடு, அவர் பெறப்போகும் தொகையில் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தும். ஆனால், அதைத்தாண்டி இந்திய அணிக்கு அவர் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். நல்ல ஃபார்மில் இருந்திருந்தால் டி20 உலகக் கோப்பை அணியிலேயே இடம்பெற்றிருப்பார். ஆனால், ஃபார்ம் சரிவு அவருக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. இப்போது மறுபடியும் ஒரு நல்ல வாய்ப்பு பெற்றிருக்கிறார். அதுவும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில்!
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் போட்டியின் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார். அதன்பின் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டார். மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனால், அதன்பிறகு மகத்தான கம்பேக்கை அரங்கேற்றியிருக்கிறார் யஷ் தயால். ஆர்சிபி அணிக்காக நல்ல செயல்பாட்டைக் கொடுத்தார். கடைசி லீக் போட்டியில் கூட தோனிக்கு அவர் வீசிய அந்த கடைசி ஓவர் அவர் திறனை வெளிக்காட்டும். ஆனால், இப்போது அந்த கம்பேக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்தச் செல்ல இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய அணிக்காக முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை யஷ் தயால் எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்.
கொல்கத்தா ரீடெய்ன் செய்திருக்கும் இந்த இளம் வீரர் தன் அதிரடியால் பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார். அதனால் தான் ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று 4 கோடிக்கே அவரை ரீடெய்ன் செய்துவிட்டது நைட் ரைடர்ஸ். அட்டகாசமாக ஃபினிஷிங் ரோலை செய்யக்கூடிய இவர், மிதவேக பௌலரும் கூட. ஏற்கெனவே ஹர்திக், நித்திஷ் என இரண்டு ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், இவரும் ஜொலிக்கும்பட்சத்தில் என்றும் இல்லாத அளவுக்கு வேகப்பந்துவீசும் ஆல்ரவுண்டர்களின் ஒரு படையையே இந்திய அணியால் உருவாக்க முடியும். இது நிச்சயம் டி20 அரங்கில் கோலோச்ச உதவிசெய்யும்.