பொதுவாக விராட் கோலி ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், அவரிடம் ஒருவீரர் அனிமேட்டடாக நடந்துவிட்டால், அவர் வேண்டாம் போதும் என சொல்லுமளவு பதிலடி கொடுக்கும் ஒருவீரர். நாம் அப்படித்தான் விராட் கோலியை கிரிக்கெட் களத்தில் பார்த்திருக்கிறோம். களத்திற்கு வெளியே கூலாக சாந்தமாக இருக்கும் கிங் கோலி, போட்டி என வந்துவிட்டால் தன்னுடைய குருவிற்கு எதிராக கூட ஆக்ரோசமான ஆட்டத்தை ஆடக்கூடியவர்.
அப்படி இருக்கும் போது டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில், இஷாந்த் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடையே வெளிப்பட்ட நட்பானது காண்போரை ஆச்சரியத்தில் தள்ளியது. முதலில் பந்துவீசிய இஷாந்த் சர்மாவிற்கு எதிராக உன்னுடைய பவுலிங்கை அடிக்கப்போகிறேன் பார் என கூறி, சிக்சர் பவுண்டரி என விரட்டினார் விராட்கோலி. ஆனால் அடுத்தபந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய இஷாந்த் சர்மா, அவருக்கு நேராக சென்று அவர்மேல் மோதி “இப்போ என்ன சொல்ற” என்பதுபோல் கிண்டல் செய்தார்.
அதையே வேறுவீரர்கள் செய்திருந்தால், விராட் கோலி முறைத்துவிட்டு சென்றிருப்பார். ஆனால் தன்னுடைய நண்பர் இஷாந்த் சர்மா கிண்டல் செய்ய, அவுட்டாகிவிட்டு விராட் கோலி சிரித்துக்கொண்டே சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நடப்பு ஐபிஎல்லில் ஒரு மறக்கமுடியாத சிறந்த தருணமாக மாறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தளவு ஒரு குடும்பமாக செயல்படுவார்கள் என்பதை நாம் இதற்குமுன்பு பார்த்திருக்கிறோம், ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜுக்கும், தோனிக்கும் இடையேயான உறவு என்பது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
தோனி போட்டியை வெற்றிபெற்று கொடுத்த பிறகு பேசிய ருதுராஜ், “எங்களின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது” என்றும், “தோனி தன்னை நன்றாக செயல்பட்டாய் என தட்டிக்கொடுக்குமாறு கூறினார்” என்றும், “பின்னர் தோனிக்கு பின்னால் நின்றுகொண்டு ஃபோஸ் கொடுத்தது என” பல சிறந்த தருணங்களை ருதுராஜ்-தோனியிடம் கொண்டிருந்தார்.
ருதுராஜ் மீது தோனி எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதும், ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே கோப்பையை நோக்கி செல்லும் என்ற தோனியின் பார்வையும், சிஎஸ்கே அணி தோனி அணியில் இல்லாமல் போனாலும் வெற்றிப்பாதையில் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக் ஒருவர் மட்டுமே ஆர்சிபி அணிக்கு சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஃபினிசராகவும் இருந்தார். பின்னர் விராட் கோலி சில சிறந்த இன்னிங்ஸ்கள் ஆடியபிறகு தினேஷ் கார்த்திக்கின் கைகளால் ஆரஞ்சு தொப்பியை வாங்கும் ஒரு நிகழ்வு நடந்தது.
அப்போது “தினேஷ் கார்த்திக் இடமிருந்து ஆரஞ்சு தொப்பியை பெற்றுக்கொண்ட விராட் கோலி, அவருக்கு வணங்கி அதை ஏற்றுக்கொண்டார், பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டே கட்டிக்கொண்டனர்”. இந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள் “இதனால் தான் அவர் கிங்கோலி” என்றும், ”ஆர்சிபி ஒரு குடும்பமாக இணைந்துள்ளது” என்றும் நெகிழ்ச்சியடைந்தனர்.
மும்பை கேப்டன்சி மாற்றத்தில் ஹர்திக் பாண்டியா சந்தித்துவரும் பிரச்னைகள் தொடர் முழுவதும் ஓய்வே இல்லாமல் நடந்துகொண்டிருந்தது. அவர் களத்திற்கு வந்தாலோ, டாஸ் போட வந்தாலோ, பந்துவீச வந்தால் என ஒவ்வொருமுறை அவர் முக்கியத்துவம் பெறும்போதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “Booo” என சத்தமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக உண்மையில் நிர்வாகம் மட்டுமே நின்றிருக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக அவர் விமர்சிக்கப்படுவதை பார்த்த ரோகித் சர்மா, மும்பை வான்கடேவில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது “ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக சத்தமிடாதீர்கள்” என ஹர்திக் பாண்டியா அமைதிபடுத்தினார். அதைப்பார்த்த ரசிகர்கள் ”அதனால் தான் அவர் அனைவருக்கும் பிடித்த வீரராக உயரத்தில் இருக்கிறார்” என கருத்துதெரிவித்தனர்.
பொதுவாக சிரிக்காமல் இருக்கமாக இருக்கும் கம்பீர் மற்றும் சுனில் நரைன் இருவரையும், ”ரோபோக்கள்” எனவும், ”நரைனை விராட் கோலி சிரிக்கவைத்தது தான் அவர் படைத்த சாதனைகளில் பெரிய சாதனை” எனவும் ரசிகர்கள் கிண்டல் செய்வது உண்டு.
அப்படியிருக்கும் போது இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி தூக்கிவைத்து கொண்டாடியது உண்மையில் ஆச்சரியமாகவே இருந்தது. இரண்டு பேரும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், “இரண்டு பேரும் சிரிக்கிறாங்க பா” என்றும், “இந்த 2 பேருக்கும் சிரிக்க தெரியுமா?” என்றும் ஜாலியாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை, நாம் கேகேஆர் வெற்றிகளில் பலமுறை பார்த்திருக்கிறோம். ஒரு பேட்ஸ்மேனாக சுனில் நரைன் சிறப்பாக செயல்படுகிறார் என்றால், அதில் கவுதம் கம்பீரின் பங்கு அதிகமாகவே இருக்கிறது என்றால் பொய்யாகாது.