டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது தற்போது பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், குவஹாத்தியில் நடைபெற்றுவருகிறது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் ஓபனிங் பேட்டர்களான ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ப்ரைம் பார்மில் இருந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சளைக்காமல் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எதிரணியை பொறுத்தவரையில் இரண்டு பேர்களில் ஒருவரை நீங்கள் பவர்பிளேவிலேயே வெளியேற்றிவிட்டால் தான், உங்களால் அதிகமான ரன்களை ராஜஸ்தான் குவிப்பதிலிருந்து தவிர்க்க முடியும். அப்படி தான் அவர்கள் கடந்த ஐபிஎல் தொடரிலேயே தங்களது சிறப்பான பார்ட்னர்ஷிப்பை நிலைநிறுத்தி இருந்தனர். அதை இந்த ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து வருகின்றனர்.
இன்றைக்கு தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் ஓவரை வீச வந்த கலீல் அஹமதை 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி, அதிரடியை வெளிப்படுத்தினார். பின்னர் தொடர்ந்து மிரட்டிய அவர், 5ஆவது மற்றும் 6ஆவது பந்திலும் பவுண்டரிகளை விரட்ட, முதல் ஒவரிலேயே 20 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. 4, 4, 4, 0, 4, 4 என முதல் ஓவரின் ரன்கள் பதிவாக, இந்த வருட ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச முதல் ஓவராக மாறியது. பவர்பிளேவில் நிறைய வீரர்கள் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்திருந்தாலும், அதனை இரண்டு முறை அடித்து அசத்தியுள்ளார் ஜெய்ஸ்வால்.
ஐபிஎல் போட்டிகளில் முதல் ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரியாக மாற்றியவர் பிரித்வி ஷா. இதனையடுத்து, முதல் ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த கில்கிறிஸ்ட் உடன் இரண்டாம் இடத்தை ஜெய்ஸ்வால் பகிர்ந்து கொள்கிறார்.
தொடர்ந்து அடித்து ஆடுவது, தூக்கியடித்து விளையாடுவது என எதையும் வெளிக்காட்டாத ஜெய்ஸ்வால், பியூர் கிரிக்கெட்டிங் ஷாட்களால் ஆடுகளத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளை விரட்டிக்கொண்டே இருந்தார். பவர்பிளேயின் 6 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்திய அவர், 11 பவுண்டரிகளை விரட்டி 25 பந்துகளில் தன்னுடைய 5ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். 30 பந்துகளில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் 60 ரன்களை குவித்த அவர், இந்த போட்டியில் டைமிங் இல்லாமல் அடிக்க முயன்று தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த வருட ஐபிஎல்லில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கும் ஜெய்ஸ்வால், முதல் போட்டியில் அரைசதத்தை பதிவு செய்த நிலையில், நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளில் 2ஆவது அரைசதத்தை பதிவு செய்து மொத்தமாக 125 ரன்கள் அடித்துள்ளார். பட்லர் 79 ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்துள்ளது.
இளையோருக்கான கிரிக்கெட்டில் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் பல சாதனைகளை புரிந்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு இணங்க சேவாக்கை போல் தொடக்கம் முதலே அதிரடி காட்டி ரன்களை குவித்து வருகிறார் ஜெய்ஸ்வால். வெறும் 2.4 கோடிக்கே இவரை ஏலம் எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.