நடப்பு ஐபிஎல் தொடரில், பிளேஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக நுழையப்போவது சென்னையா அல்லது பெங்களூருவா என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத் தீர்மானிக்கும் போட்டி, இன்று பெங்களூருவில் தொடங்கியது.
முன்னதாக, டாஸ் ஜெயித்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கிங் விராட் கோலியும் கேப்டன் ஃபாப் டு டுப்ளசிஸும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய இருவரும் 3 ஓவர்களிலேயே 31 ரன்களை எடுத்தனர்.
மழை வந்ததும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் 8.25 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே மீண்டும் அதிரடிக்கு திரும்பினர் கோலி மற்றும் டுப்ளசிஸ்.
அதிரடியாக ஆடிய கோலி 9.4 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு சீசனில் அதிக சிக்சர்களை அடித்தவர்களது பட்டியலில் கோலி 37 சிக்சர்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். 36 சிக்சர்களை அடித்து இரண்டாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் உள்ளார்.
அரைசதம் அடித்திருந்த டுப்ளசியும் எதிர்பாராத விதமாக வெளியேற, பின் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்களை இழந்து 218 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டுப்ளசிஸ் 54 ரன்களையும், கோலி 47 ரன்களையும், படிதார் 41 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சுமாராகவே பந்துவீசிய சென்னை அணியில் தாக்கூர் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் சாண்ட்னர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
219 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி ப்ளே ஆஃப்க்குள் செல்ல 201 ரன்களைக் கடக்க வேண்டும். இந்நிலையில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ். 2 ஓவர் முடிவின்போது சென்னை அணி 19 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. களத்தில் மிட்செல் மற்றும் ரச்சின் ஆடி வருகின்றனர்.