டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து. இதையடுத்து குரூப் 1 பிரிவில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்புள்ளது எனப் பார்க்கலாம்.
இறுதிக்கட்டத்தில் சூப்பர் 12!
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளநிலையில், இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி முதல் ஆளாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 7 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் +2.113 எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்ற உடனே அரையிறுதி உறுதியாகவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறாமல் போனதால் அந்த ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியின் அரையிறுதி எண்ட்ரி உறுதியானது.
அரையிறுதிக்கு குரூப் 1 பிரிவில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் 2 அணிகளும், குரூப் 2 பிரிவில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் 2 அணிகளுமே அரையிறுதிக்கு செல்லும். அந்த வகையில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வது மட்டும் தற்போதைய நிலவரப்படி உறுதியாகியுள்ளது. மற்றொரு இடத்தை உறுதிசெய்யத் தான் தற்போது கடுமையானப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு எப்படி?
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அதிக நெட் ரன் ரேட்டுகளுடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் கடைசிப்பந்து வரை கொடுத்த ட்விஸ்ட்டால், ஆஸ்திரேலியா அணி 4 ரன்களில் ஜெயித்தாலும், நெட் ரன் ரேட் மிகவும் குறைந்துள்ளது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தாலும் நாளை இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் போட்டியின் வெற்றி, தோல்வியை வைத்தே அந்த அணிக்கான இடம் உறுதி செய்யப்படும்.
ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட்டில் -0.173 என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், அதே குரூப் 1 பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி, 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளது. எனினும் நெட் ரன் ரேட்டில் +0.547 என ஆஸ்திரேலியாவை விட அதிகம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலே போதும்!
இதனால் நாளை இலங்கைக்கு எதிராக நடக்கும் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டும் போதும், 7 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் காரணமாக இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும். ஒருவேளை அந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு சென்றுவிடும். இதனால் நாளை நடக்கும் போட்டி, இங்கிலாந்து அணிக்கு மட்டுமில்லை, ஆஸ்திரேலியா அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கை வெற்றி பெற வேண்டும் ஆஸ்திரேலியா!
இலங்கை அணி நாளை வெற்றிபெற்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பை தடுக்க முடியும். அத்துடன் குரூப் 1 பிரிவில் உள்ள அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளன. இதனால், நாளை நடைபெறும் போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துள்ளது.
குரூப் 1 - வெற்றி, தோல்வி, புள்ளி, ரன்ரேட் நிலவரம்:
1. நியூசிலாந்து - 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து, 7 புள்ளி, 2.113 ரன்ரேட்
2. ஆஸ்திரேலியா - 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து, 7 புள்ளி, -0.173 ரன்ரேட்
3. இங்கிலாந்து - 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி ரத்து, 5 புள்ளி, 0.547 ரன்ரேட்
4. இலங்கை - 2 வெற்றி, 2 தோல்வி, 4 புள்ளி, -0.457 ரன்ரேட்
5. அயர்லாந்து - 1 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி ரத்து, 3 புள்ளி, -1.615 ரன்ரேட்
6. ஆப்கானிஸ்தான் - 0 வெற்றி, 3 தோல்வி, 2 போட்டி ரத்து, 2 புள்ளி, -0.571 ரன்ரேட்