இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், தென்னாப்ரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது பேசிய, கேப்டன் பவுமா, தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் டி காக் விளையாடவில்லை என்றார்.
நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்னாப்ரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே டி காக், திடீரென விலகினார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்ட தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம், அணி நிர்வாகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் BlackLivesMatter விவகாரத்திற்காக போட்டி தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் வீரர்கள் மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியிலும் இரு அணி வீரர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.