சீனியர்களை அழைத்த பிசிசிஐ - வீரர்கள் நாடு திரும்பியதும் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்!

சீனியர்களை அழைத்த பிசிசிஐ - வீரர்கள் நாடு திரும்பியதும் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்!
சீனியர்களை அழைத்த பிசிசிஐ - வீரர்கள் நாடு திரும்பியதும் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்!
Published on

நாடு திரும்பியதும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுடன், டி20 இந்திய அணியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது. இதனிடையே சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை கூண்டோடு மாற்றியமைக்கலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் களமிறக்கப்படாததும், நட்சத்திர வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் பலர் இருந்தும், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் சோபிக்கவில்லை. இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

நேற்றுகூட போட்டிக்கு பின்னதாகப் பேசிய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிடம், மூத்த வீரர்களின் எதிர்காலம் மற்றும் ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர், இப்போது இதைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று கூறினார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுடன், 20 ஓவர் வடிவ இந்திய அணியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "தற்போது அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. வீரர்கள் நாடு திரும்பியதும் 20 ஓவர் வடிவ இந்திய அணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். இந்தக் கூட்டத்தில் ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை அழைத்துப் பேசவுள்ளோம். அவர்களிடம் பேசியப் பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணி நிர்வாகமும், வீரர்களும் முதலில் தங்களது கருத்துக்களை முன்வைக்கட்டும், அந்தக் கருத்துக்களை ஆலோசித்துப் பின்னர் அதனை எவ்வாறு சரிசெய்வது என்பதை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மோசமான தோல்வியடைந்ததை அடுத்து தற்போது அணியை சீரமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர், வருகிற 2024-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையிலேயே இந்திய அணி வீரர்களின் சராசரி வயது 30.6 ஆக இருந்ததும் தோல்விக்கு காரணமாகக் கூறப்பட்டது. பழைய அணிகளில் ஒன்றாக கருதும் வகையில் மூத்த வீரர்கள் மிகுந்திருந்தனர்.

இருப்பதிலேயே அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் தான் (37) அதிக வயதுடையவர். இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் (36), கேப்டன் ரோகித் சர்மா (35), விராட் கோலி (33), சூர்யகுமார் யாதவ் (32), புவனேஷ்வர் குமார் (32), முகமது ஷமி (32) ஆகிய அனைவருமே 30 வயதுக்கு மேலானவர்கள். இதில் விராட் கோலி மட்டுமே நன்றாக விளையாடினார். இதனால் இந்த மூத்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இடம்பிடிப்பது சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது. ஏன் ரோகித் சர்மாவே அப்போது அணியில் இருப்பாரா எனக் கேள்விக் குறி எழுந்துள்ளது.

எனவே, யாருக்கும் பாதகமில்லாமல் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதே அணி நிர்வாகத்திற்கும், தேர்வாளர்களுக்கும் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் நியூசிலாந்தில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா, டி20 தொடர்களில் இந்திய கேப்டனாக மாற வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஓரளவு நல்ல இலக்கைப் பெற விராட் கோலியும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யாவும் தான் காரணம்.

எது எப்படி ஆயினும், வீரர்கள் தேர்வில் சில புதிய முகங்கள் இடம்பெறலாம் எனத் தெரிய வருகிறது. தற்போது உள்ள வீரர்கள் தேர்வுக்குழுவில், இந்திய அணியின் முன்னாள்வீரர் சேத்தன் சர்மா தலைவராக உள்ளார். மேலும் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கிடையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வியால், சேத்தன் சர்மா மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com