சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்ற நிலையில், வங்கதேச வீரருக்கு பேட் ஒன்றை பரிசாகக் கொடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றின் 35-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடல் களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க ஆட்டகாரர் லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வங்கதேச அணியின் பக்கம் வெற்றிசென்றுக் கொண்டிருந்த நிலையில் இடையில் மழை குறுக்கிட்டது. அப்போது வங்கதேச அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. மழை அப்படியே தொடர்ந்து பெய்திருந்தாலும் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி 17 ரன்கள் முன்னிலையில் வெற்றி பெற்றிருக்கும். பின்னர் சிறிது நேரம் கழித்து துவங்கிய போட்டியில் மளமளவென விக்கெட் சரிந்தநிலையில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி ஜெயித்தது.
மேலும், இந்த ஆட்டத்தின் போது முதல் இன்னிங்சில் ஒரே ஓவரில் 2-வது முறையாக பவுன்சர் வீசியதால் நோ பால் கேட்டது, இரண்டாவது இன்னிங்சில் அக்சர் படேல் வீசிய 7-வது ஓவரின்போது, பாயிண்ட் திசையில் நின்ற விராட் கோலி, லிட்டன் தாஸ் அடித்த பந்தை பிடிக்காமலேயே, வேகமாக நான் ஸ்டிரைக்கர் திசையில் உள்ள ஸ்டம்ப் நோக்கி வீசுவது போல சைகை காண்பித்ததால் ‘Fake fielding’ என்று குற்றச்சாட்டப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் விராட் கோலி மீது எழுந்தது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்திய அணிக்கு தனது பேட்டிங்கால் மிரட்டல் காட்டிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸை (27 பந்துகளில் 60 ரன்கள்) பாராட்டும் வகையில், பேட் ஒன்றை பரிசாகக் கொடுத்து விராட் கோலி நெகிழ வைத்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வாரிய ஆப்ரேஷன் சேர்மன் ஜலால் யூனஸ் அந்நாட்டு செய்தித் தாள் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில், “போட்டி முடிந்த பின் உணவு அருந்தும் அறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது விராட் கோலி எங்களிடம் வந்து அவருடைய பேட்டை லிட்டன் தாசுக்கு பரிசளித்தார். என்னை பொருத்தவரை அது லிட்டனுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும் தருணமாகும்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் விராட் கோலி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
எனினும் ‘Fake fielding’ விவகாரம் குறித்து ஐசிசியிடம் முறையாக புகார் அளிப்போம் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய ஆப்ரேஷன் சேர்மன் ஜலால் யூனஸ் தெரிவித்துள்ளார்.