டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில், வங்கதேச அணிக்கு 206 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த தொடரின் முதல் சதத்தை தென்னாப்பிரிக்கா வீரர் ரைலீ ரூசோ பதிவு செய்துள்ளார்.
8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் துவங்கிய இந்தப் போட்டியில் தகுதிச் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் உள்ள தென்னாப்பிரிக்கா அணி, தனது முதல் போட்டியில் ஜிம்பாம்பே அணியை கடந்த திங்கள்கிழமை சந்தித்தது. ஆனால் அந்தப் போட்டி மழை காரணமாக பாதியில் விடப்பட்ட நிலையில், இரண்டு அணிகளுக்கும் சமமாக பாயிண்ட்ஸ்கள் பிரித்து வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி, வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதன்படி, டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வங்கதேசத்தை சேர்ந்த டஸ்கின் அகமது முதல் ஓவரை வீசினர். முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காதநிலையில், இரண்டாவது பந்தில் பவுமா இரண்டு ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளிலும் ரன்கள் எடுக்க முடியாத வகையில் பந்துவீச்சின் மூலம் டஸ்கின் அகமது ஓவரை கட்டுப்படுத்தினார்.
முதல் ஓவரின் கடைசிப் பந்தில், நூருல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து பவுமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு குயிண்டன்டி காக்குடன் ஜோடி சேர்ந்த ரைலீ ரூசோ, தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் வங்கதேச பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் குயிண்டன் டி காக்கும் எதிர்புறம் ரன்களை குவிக்க துவங்கினார். இந்த ஜோடி 168 ரன்கள் குவித்தது. பின்னர், 38 பந்துகளில் 63 ரன்களை குவித்த நிலையில் அஃபிஃப் ஹுசைன் பந்து வீச்சில், டி காக் சௌமியா சர்க்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.
அதன்பிறகு களமிறங்கிய டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 7 ரன்களில் ஷாகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் மறுபுறம் களத்தில் இருந்த ரைலீ ரூசோ பவுண்டரிகள் மற்றும் சிக்ஸருக்கு பந்துகளை விரட்டிக் கொண்டிருந்தநிலையில், 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தபோது ஷாகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் அவுட்டானர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. மேலும் தற்போது நடைபெற்று வரும் டி20 தொடர் உலகக் கோப்பையில், முதல் சதத்தை ரைலீ ரூசோ பதிவு செய்துள்ளார். 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் இதில் அடங்கும்.
வங்கதேசத்தின் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத் மற்றும் அஃபிஃப் ஹுசைன் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அந்த அணி அதிரடியுடன் துவங்கியநிலையில், 2-வது ஓவரில் சௌமியா சர்க்கார் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தநிலையில் அன்ரிச் நோர்ட்சே பந்து வீச்சில் குயிண்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவவுட்டானார். தொடர்ந்து நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 9 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் அஃபிஃப் ஹுசைன் ஒரு ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணி தற்போது 6 ஓவரில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.