டி20 உலகக் கோப்பை: ரூசோ, நார்ட்ஜேவின் அசத்தலான ஆட்டத்தால் வங்கதேசம் படுதோல்வி

டி20 உலகக் கோப்பை: ரூசோ, நார்ட்ஜேவின் அசத்தலான ஆட்டத்தால் வங்கதேசம் படுதோல்வி
டி20 உலகக் கோப்பை: ரூசோ, நார்ட்ஜேவின் அசத்தலான ஆட்டத்தால் வங்கதேசம் படுதோல்வி
Published on

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில், வங்கதேச அணியை 101 ரன்களில் சுருட்டி, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, கேப்டன் பவுமாவும், விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால், வங்கதேச வலதுகை வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், கேப்டன் பவுமா 6 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் நூருல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.

முதல் விக்கெட்டுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த டி காக்கும், ரைலீ ரூசோவும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து தள்ளினர். 3 சிக்ஸர்கள், 7 பவுண்டகளுடன் 38 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்த டி காக், வலது கை பந்து வீச்சாளர் அஃபிஃப் ஹுசைனின் பந்து வீச்சில் அவுட்டானர். மறுபுறம் நிதானமாக அதேசமயத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைலீ ரூசோ 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்திருந்தது.

206 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, லிட்டன் தாஸ் மட்டுமே நிதானமாக விளையாடினார். எனினும் அந்த வங்கதேச அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமான லிட்டன் தாஸ் 34 ரன்களும், சௌமியா சர்க்கார் 15 ரன்களும் எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில், அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளும், டப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா மற்றும் கேஷவ் மஹராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி, 3 பாயிண்ட்ஸ்களுடன் குரூப் 2 பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேநேரத்தில் படுதோல்வியை சந்தித்த வங்கதேச அணி, 2 பாயிண்ட்ஸ்களுடன் 3-வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com