முதலிடத்தில் இந்திய அணி.. வெற்றி பெற்றாலும் இந்த சிக்கல் மட்டும் இன்னும் தொடர்கிறது!!

முதலிடத்தில் இந்திய அணி.. வெற்றி பெற்றாலும் இந்த சிக்கல் மட்டும் இன்னும் தொடர்கிறது!!
முதலிடத்தில் இந்திய அணி.. வெற்றி பெற்றாலும் இந்த சிக்கல் மட்டும் இன்னும் தொடர்கிறது!!
Published on

டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்று இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 23-வது போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

தொடக்கத்தில் சோதித்த இந்திய பேட்ஸ்மேன்கள்!

களத்தில் இறங்கியது முதல் இருவரும் அதிரடிகாட்ட முனைந்தாலும் நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால், முதல் 2 ஓவர்களில் இந்திய அணி 9 ரன்களே எடுத்திருந்தது. இந்நிலையில், 2.4-வது ஓவரில் வான் மீகேரென் வீசிய ஃபுல் டெலிவெரி பந்தை ராகுல் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்று எல்.பி.டபிள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்தபோதும், கே.எல்.ராகுலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில், ரோகித்திடம் சென்று கலந்துரையாடினார்.

பந்து ஸ்டம்பிற்கு வெளியே சென்றதா என அவரிடம் கேட்டநிலையில், அதற்கு ரோகித் சர்மாவும் துணிச்சலுடன் டி.ஆர்.எஸ் எடுத்துப்பார் எனக் கூறினார். எனினும் தொடர்ந்து சந்தேகத்துடனே இருந்த கே.எல்.ராகுல் கடைசி வரை 3-வது நடுவருக்கு பரிந்துரைக்கவில்லை. இதனால் கே.எல்.ராகுல் 12 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.

ரோகித் கேட்சை கோட்டைவிட்ட நெதர்லாந்து வீரர்

இதனைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். இதன்பிறகாவது அதிரடி ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில், தொடர்ந்து நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதற்கிடையில், 5-வது ஓவரில் ரோகித் சர்மா கொடுத்த கேட்சை நெதர்லாந்து வீர் பிரெட் கிளாஸன் தவறவிட்டார். தொடர்ந்து கோலி மற்றும் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில், 27 ரன்களில் ரோகித் சர்மா இருந்தபோது வான் பீக் வீசிய பந்து காலில் பட்டது.

கடைசியில் அதிரடி காட்டிய விராட், சூர்யகுமார்

இதை எல்.பி.டபிள்யூ என அறிவித்தார் நடுவர். எனினும் டி.ஆர்.எஸ். முறையீடு கோரினார் ரோகித் சர்மா. இதில் பந்து, மட்டையில் பட்டப் பிறகு கால்காப்பில் பட்டது தெரியவந்ததால், நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்துத் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. கே.எல். ராகுல் செய்த தவறை ரோகித் சர்மா செய்யவில்லை.

இதன்பிறகு களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் மற்றும் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நெதர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக விராட் கோலி 62 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்திருந்தனர்.

56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி நெதர்லாந்து அணி, 3-வது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின்பு வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் பொறுமையாக விளையாடினாலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், அஸ்வின், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் எடுத்தார். 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்திய அணி, 4 பாயிண்ட்ஸ்கள் பெற்று குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

வெற்றி பெற்றாலும் இந்திய அணிக்கு இது சிக்கல்தான்!!

இந்திய அணி அபார வெற்றி பெற்றாலும் முதல் 10 ஓவர்களில் 67 ரன்கள் மட்டும் எடுத்தது சிக்கலாகவே தோன்றுகிறது. தொடக்க ஓவர்களில் ரன் குவிக்க இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தடுமாறுகிறார்கள் என்ற விமர்சனங்கள் உள்ளதை மறந்துவிடக் கூடாது. இரண்டாவது 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் ஓரு வேளை ரன் குவிக்க தவறிவிட்டால் அது சிக்கலாக மாறிவிடும். சூர்ய குமாரின் வேகம் தான் ரன்னை 179 வரை எடுத்துச் சென்றது.

நெதர்லாந்து என்பதால் குறைவான ரன் அடித்தாலும் எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், மற்ற அணிகளிடம் முதல் 10 ஓவர்களில் 75-80 ரன்கள் எடுப்பது முக்கியமான ஒன்று. அப்பொழுதுதான் 175 ரன்களுக்கு மேல் சிக்கல் இல்லாமல் குவிக்க முடியும். பெரிய அணிகளை எதிர்கொள்ளும் போது இந்த சிக்கல் நன்றாகவே வெளிப்படும். கே.எல்.ராகுலின் பார்ம் கவலை தரும்வகையிலே உள்ளது. விராட் கோலி, சூர்ய குமாரின் கன்சிஸ்டன்ஸி இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com