கடைசி பந்து வரை கதிகலங்கி நின்ற ஆஸ்திரேலியா! தோற்றாலும் இதயங்களை வென்ற ரஷீத்கான்!

கடைசி பந்து வரை கதிகலங்கி நின்ற ஆஸ்திரேலியா! தோற்றாலும் இதயங்களை வென்ற ரஷீத்கான்!
கடைசி பந்து வரை கதிகலங்கி நின்ற ஆஸ்திரேலியா! தோற்றாலும் இதயங்களை வென்ற ரஷீத்கான்!
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் 1 பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா அணியும், கத்துக்குட்டி அணியான ஆஃப்கானிஸ்தான் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டி என்பதாலும், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் ஆஸ்திரேலியா அணியும், அந்த அணியை அரையிறுதிக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் அல்லது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியும் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி பவுலிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். முதல் ஓவரை பாசல்ஹக் பரூக்கி வீசினார். அந்த ஓவரில் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த ஓவரில் இருந்து டேவிட் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், 3-வது ஓவர் முதல் பந்திலேயே நயீப்பிடம் கேட்ச் கொடுத்து கிரீன் 3 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டானார். தொடர்ந்து டேவிட் வார்னர் 25 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஆஃப்கானிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி இறுதியில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் மேக்ஸ்வெல் 54 ரன்களும், மார்ஷ் 45 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஃப்கானிஸ்தான் சார்பில், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும், பரூக்கி 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் குர்பஸ், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கனி 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 72 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் மட்டுமின்றி அந்த அணி வீரர்களும் கொஞ்சம் பதற்றத்துடனே இருந்தனர்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, 14-வது ஓவர் மோசமாக அமைந்தது. அந்த ஓவரில் மட்டும் நயீப் 39 ரன்களிலும், இப்ராஹிம் 26 ரன்களிலும், நஜிப்புல்லா ரன் ஏதும் எடுக்காமல் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் அவுட்டாகினர். இந்த ஓவர் தான் ஆஸ்திரேலிய அணியின் தலையெழுத்தை மாற்றியது என்றே கூறலாம். அதுவரை ஆஸ்திரேலிய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தபோது ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சு கைக்கொடுத்தது.

அதன்பிறகு ஹாசல்வுட் பந்துவீச்சில் 15-வது ஓவரில், நபி அவுட்டாக, ரஷித்கான் களமிறங்கினார். இதன்பின்னர் மீண்டும் ஆட்டம் ஆஃப்கானிஸ்தான் நோக்கி சென்றது. ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்துவீச்சை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாவும் அடித்து ஆரம்பித்தார் ரஷித்கான். இதனால் ஆஸ்திரேலியா அணி தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. 18-வது ஓவரில் மட்டும் அந்த அணி 16 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என ரஷித்கான் அடித்து விரட்டி 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தாலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியடைந்தது.

எனினும் இறுதிவரை ஆஸ்திரேலிய அணிக்கு கடுமையான போட்டி அளித்ததுடன், கிரிக்கெட் ஜாம்பவனான ஆஸ்திரேலிய அணி நெட் ரன் ரேட்டில் அதிகளவு ஸ்கோர் எடுக்கமுடியாத அளவு ஆஃப்கானிஸ்தான் அணி பார்த்துக்கொண்டது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com