20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 200 ரன்கள் குவித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து இன்று நடைபெற்ற சூப்பர் 12 இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரதுல்லா ஷசாய் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மனுல்ல குர்பாஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய இப்ரகிம் ஜத்ரான் மற்றும் உஸ்மான் ஜோடி சிறிதுநேரம் தாக்குபிடித்து ரன்களை குவித்ததால், ஆப்கன் அணியின் ஸ்கொர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளித்து இருவரும் முறையே 32 மற்றும் 30 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் சாம் கரன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸை 2 ரன்களில் அவுட்டாக்கி ஆப்கன் பவுலர்கள் வழியனுப்ப, 18 ரன்களை எடுத்த நிலையில் டேவிட் மலனும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டத்தின் போக்கு மாறுவதை உணர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கத் துவங்கினார்.
இதன்பின்னர் தான் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் மெல்ல மெல்ல உயர்ந்தது. இதையடுத்து . 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆப்கன் நிர்ணயித்த இலக்கை கடந்தது இங்கிலாந்து அணி. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் எளிய இலக்காக கருதப்படும் இந்த 113 ரன்களை இங்கிலாந்து அணி போராடியே எட்டியது. அந்த அளவிற்கு இங்கிலாந்து அணியின் முக்கிய ரன்குவிக்கும் பேட்ஸ்மேன்களை எளிதாக சாய்ந்து இறுதி வரை போட்டியை நெருக்கடியான நிலைக்கு கொண்டு சென்றதற்கான முழு பாராட்டும் ஆப்கன் பவுலர்களுக்கும் பீல்டர்களுக்கும் மட்டுமே உரியது.
இந்தப் போட்டியின் முடிவுகள் ஆப்கான் அணியை எதிர்கொள்ளும் மற்ற அணிகளுக்கு சற்றே முன்னெச்சரிக்கையை கொடுக்கும். ஆப்கன் அணியுடன் விளையாடும் போது சற்றே எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடும். அத்துடன் குரூப் சுற்று போட்டிகளில் இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கே கத்துக்குட்டி அணிகள் ஷாக் கொடுத்ததை மறந்துவிடக் கூடாது. அதுவும் மேற்கு இந்திய தீவுகள் அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் அளவிற்கு நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகளின் ஆட்டம் இருந்தது.
நாளைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் உடன் மோதுகின்றது. அயர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்கிறது.