'15 ரன்களுக்கு ஆல் அவுட்' - பிக்பாஷ் டி20 லீக்கில் மோசமான சாதனைப்படைத்த 'சிட்னி தண்டர்ஸ்'

'15 ரன்களுக்கு ஆல் அவுட்' - பிக்பாஷ் டி20 லீக்கில் மோசமான சாதனைப்படைத்த 'சிட்னி தண்டர்ஸ்'
'15 ரன்களுக்கு ஆல் அவுட்' - பிக்பாஷ் டி20 லீக்கில் மோசமான சாதனைப்படைத்த 'சிட்னி தண்டர்ஸ்'
Published on

ஆஸ்திரேலியா பிக்பேஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, டி20 தொடர்களிலேயே மோசமான வரலாற்று சாதனையை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் பிரபலமான ஐபிஎல் டி20 தொடர் போன்று, ஆஸ்திரேலியாவிலும் பி.பி.எல். எனப்படும் பிக்பேஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி துவங்கியுள்ள பிக்பேஷ் சீசன் 12 (BBL12), வருகிற பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், மொத்தம் 61 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் சிட்னி ஷோ கிரவுண்ட் மைதானத்தில் இன்று நடந்த 5-வதுப் போட்டியில், சிட்னி தண்டர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக அந்த அணியில் கிறிஸ் லின் 36 ரன்களும், காலின் டி கிராண்ட்ஹோமே 33 ரன்களும் எடுத்திருந்தனர். சிட்னி தண்டர்ஸ் சார்பில் ஃபாசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளும், சாந்து, டேனியல் சாம்ஸ், பிரெண்டன் டாகட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி, 5.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்களே எடுத்தது. இதில் எக்ஸ்ட்ராஸ் 3 ரன்கள் போனால், வெறும் 12 ரன்கள் தான் அந்த அணி வீரர்கள் எடுத்திருந்தனர். அந்த அணியின் அதிகப்பட்ச ரன்னே பிரெண்டன் டாகட் எடுத்திருந்த 4 ரன்கள் தான். சொல்லப்போனால் 5 வீரர்கள் டக் அவுட் ஆகியிருந்தனர். 3 வீரர்கள் ஒரு ரன்களும், அலெக்ஸ் ரோஸ் 2 ரன்னும், ரைல் ரோசாவ் 3 ரன்களும் எடுத்திருந்தார்.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் சார்பில் ஹென்றி தார்ன்டன் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளும், வேஸ் அகர் 4 விக்கெட்டுகளும், மாட் ஷார்ட் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர்ஸ் அணியினர் டி20 தொடரிலேயே மோசமான வரலாற்று சாதனையை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com