சக வீரரை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று உயிரிழந்தவரின் பெற்றோர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தன்கெட் மரணத்தை கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுஷில் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து பேசியுள்ள உயிரிழந்த ராணாவின் பெற்றோர் "சுஷில் குமார் மல்யுத்த குரு என சொல்வதற்கு தகுதியானவர் அல்ல. அவர் இதுவரை பெற்ற பதக்கங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். போலீஸார் இந்த வழக்கை நேர்மையாக விசாரணை செய்வார்கள் என நம்புகிறோம். சுஷில் குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை அழிக்கவும் வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.
மேலும் பேசிய அவர்கள் " இந்த வழக்கில் எங்களுக்கு நேர்மையான தீர்ப்பு கிடைக்க வேண்டும். இந்தச் செயலை செய்த சுஷில் குமாரை தூக்கில்போட வேண்டும். இந்தத் தண்டனை கொலை செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார்கள்.